அபூர்வ சகோதரர்கள் படத்துக்காக முதலில் எடுத்த பாடல்

கடந்த வார இறுதி கலைஞர் தொலைக்காட்சியில் திரையிடப்பட்ட "அபூர்வ சகோதரர்கள்" வழக்கம் போல் என்னுள் நிறைய கடந்த கால நினைவுகளை எழுப்பிவிட்ட‌து. வெளி வந்த நேரம் எனக்கு 5 வயது. சென்னை கோடம்பாக்கம் பாட்டி வீட்டில் கேசட்டை கஷ்டப்பட்டு வாங்கி வந்து 3 நாட்கள் திரும்பத்தராமல் சுமார் 15 முறை பார்த்திருப்பேன். (புது படங்களை அப்போது அரை நாள் தான் வாடகைக்கு தருவார்கள்). அந்த படத்தில் எல்லா காட்சிகளையும் அட்டகாசமாக எடுத்திருப்பார்கள். பேசத்துவங்கினால் பக்கம் பக்கமாக பேசலாம் அபூர்வ சகோதரர்கள் பற்றி. இந்த ப‌டம் முதலில் துவங்கிய சில நாட்களிலேயே டிரிக் ஷாட்கள் எடுக்க வேறு சில உக்திகள் யோசிக்க ஆரம்பித்ததால் படத்தை நடுவில் நிறுத்திய விடயம் தெரிந்ததே. அப்போது எடுத்த ஒரு பாடல் காட்சி உங்களுக்காக. உங்களில் பலர் இதைப் பார்த்திருக்கக்கூடும். இது தான் பின்பு "ராஜா கைய வைச்சா" என்ற பாடல் ஆகியிருக்கும் என நினைக்கிறேன். (ஆனால் அவர் புலி வேடத்தில் ஆடியதால் இந்த பாடல் இலங்கையில் திரையிடப்படவில்லை என்ற தகவலும் கேள்விப்பட்டேன்)
கொசுறாக எல்லோருக்கும் பிடித்தமான காட்சி.நிறைய நுணுக்கமான விஷயங்கள் செய்திருக்கிறார் கமல்ஹாசன் இந்த படத்திற்காக. மற்ற படங்களை விட இதில் அவர் கால் ஒல்லியாக இருக்கும். மடித்துக்கட்ட வசதியாக எடை குறைந்திருக்கிறார். குள்ள கமல் வேடத்தில் கால்சட்டையை மேலே உயர்த்தி பாதி வயிற்றில் போட்டிருப்பார். பற்களையும் சின்னதாக காட்டி இருப்பார்கள் அந்த வேடத்தில். அலசி எழுத நிறைய விடயங்கள் இருந்தாலும் நேரமின்மையால் முடிக்கிறேன். சகாக்கள் கொஞ்சம் எழுதலாமே இந்த படத்தை பற்றி.

குரு படம் வெளியான நேரம் குதிரை ஒன்று வேண்டும் என அடம்பிடித்தவன் இந்த படம் வந்த காலத்தில் காக்கட்டூ வேண்டும் என அழுதது நினைவிருக்கிறது. இப்போது வாங்கும் வசதி இருந்தும் நேரமில்லாத்தால் ஒத்திவைக்கப்பட்ட ஆசைகள் பட்டியலில் அது இருக்கின்றது. (சென்னை மக்கள்ஸ் "கடல்குதிரைகள்" கிடைக்குமிடம் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்....)