கமல் தெலுங்கில் நடித்து பின் தமிழில் டப்பாகிய படங்களில் குறிப்பிடத்தக்கவை என்று பார்த்தால் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, ஹரே ராதா ஹரே கிருஷ்ணா, இந்திரன் சந்திரன் மற்றும் பாசவலை ஆகிய படங்களைச் சொல்லலாம். இப்படங்களைப் பற்றிய ஒரு சிறு பார்வை.
சலங்கை ஒலி (1983)
கே விஸ்வனாத் இயக்கிய சாகர சங்கமம் தமிழிலும் பெரு வெற்றியைப் பெற்றது. ஆந்திர அரசின் நந்தி விருது, பிலிம்பேர் விருது ஆகியவைகளையும் வென்ற படம் இது. 80களில் ஏன் இப்போதும் கூட பல கல்லூரி விழாக்களில் பரத நாட்டியப் பாடலாக இப்படத்தின் ஓம் நமச்சிவாய எனத் தொடங்கும் பாடல் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இப்படத்தில் கமல் நாட்டிய அழைப்பிதழை பார்க்கும் சீன், ஐந்து வகை நாட்டியங்களை ஆடிக் காட்டுவது, கிணற்றின் நடுவில் செல்லும் பைப்பில் ஆடும் காட்சி போன்றவை பல படங்களில் காமெடிக்கு பயன் படுத்தப் பட்டு வருகின்றன.
ஹரே ராதா ஹரே கிருஷ்ணா (1985)
இளையராஜா இசையில், ஏ கோதண்டராமி ரெட்டி இயக்கி ஒக்க ராதா இதரு கிருஷ்ணலு என்ற பெயரில் வெளியான படம். கமல் – ஸ்ரீதேவி கெமிஸ்ட்ரி இதில் நோபல் பரிசு ரேஞ்சுக்கு இருக்கும். 85 ஆம் ஆண்டு வெளியான அந்த ஒரு நிமிடம், மங்கம்மா சபதம் போன்றவை சரியாகப் போகாததால் இந்தப் படத்தை கமல் நஷ்டப்பட்ட வினியோகஸ்தர்களுக்கு ஈடாக கொடுத்ததாக அப்போது ஒரு பேச்சு உண்டு. காமெடி, காதல், நடனம் என கமல் பின்னி எடுத்த அக்மார்க் தெலுங்கு படம். இங்கும் குறிப்பிடத்தக்க அளவு ஓடி லாபம் கொடுத்தது. கமல், ஸ்ரீதேவி காதல் காட்சிகள்,நடனக் காட்சிகளுக்காவே ரீப்பிட்டட் ஆடியன்ஸோடு ஓடிய படம். இப்படத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம், சமகால தெலுங்கு சினிமாவை (வெள்ளை குதிரையில் ஹீரோ, புதையல் தேடுச் செல்லும் சாகஸம்) சகட்டு மேனிக்கு கிண்டல் அடித்திருப்பார்கள். ஆங்கிலத்தில் ஹாட் ஷாட் போன்ற படங்களில் பயன் படுத்திய உத்தியும் இங்கே பயன் பட்டிருக்கும். தமிழில் அதுபோல் ரங்கநாதன் இயக்கிய ஆஹா என்ன பொருத்தம் படத்திலும், இப்போது குயிக் கன் முருகனிலும் இந்த உத்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அழகிரியின் மகன் தயாநிதி தயாரிக்கும் தமிழ் படம் என்னும் படமும் இந்த வகையிலே படமாக்கப் படுவதாக செய்திகள் வந்துள்ளன.
சிப்பிக்குள் முத்து (1986)
இதுவும் கே விஸ்வனாத் இயக்கிய படமே. சுவாதி முத்யம் என்னும் பெயரில் வெளியாகி கமலுக்கு ஆந்திர அரசின் நந்தி விருது வாங்கித் தந்த படம். கமல் ராதிகா இணையில் அருமையான பாடல்களுடன் வந்து இங்கேயும் வெற்றி பெற்றது.
இந்திரன் சந்திரன் (1990)
89ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் இந்துருடு சந்துருடு என்னும் பெயரில் வெளியாகி பிலிம் பேர் விருது, நந்தி விருது வாங்கிய படம். இங்கேயும் வெளியாகி நன்கு ஓடியது. கமலின் மேயர் கெட்டப்பும், வசன உச்சரிப்பும் அனைவரையும் கவர்ந்தது. கேரள ஜெயலலிதா, குயிலியுடன் மேயர் அடிக்கும் கொட்டமும், விஜய் சாந்தியுடன் இன்னொரு கமலின் காதலும் ரசமானவை.
பாசவலை (1995)
கே விஸ்வநாத்தின் இயக்கத்தில் சுப சங்கல்பம் என்னும் பெயரில் வெளியான படம் . இசை மரகத மணி. கமலின் ஜோடியாக ஆம்னியும், முதலாளி (கே விஸ்வனாத்) மகளாக பிரியா ராமனும் நடித்த படம். இந்தப் படத்தில் கமல், தன் மனைவி இறந்த சோகத்தை மறைத்துக் கொண்டு நடிக்கும் காட்சிகளில் ஆந்திர ரசிகர்கள் காசுகளை திரையில் நோக்கி விட்டெறிந்தார்களாம். எஸ் பி பாலசுப்ரமணியம் இதை தமிழில் வெளியிட்டார். தெலுங்கு அளவுக்கு இங்கு வெற்றியில்லை. இந்தப் படம் ஆந்திர கடலோரப் பகுதி மீனவர் வாழ்வை ஓரளவு பிரதிபலித்த படம். இதில் மீனவர் வாழ்வு பற்றிய நிகழ்வுகளை கமல் மோனோ ஆக்டிங்கில் பிரமாதமாக வெளிப்படுத்தியிருப்பார்.
Subscribe to:
Posts (Atom)