கமலின் தெலுங்கு டப்பிங் படங்கள்

கமல் தெலுங்கில் நடித்து பின் தமிழில் டப்பாகிய படங்களில் குறிப்பிடத்தக்கவை என்று பார்த்தால் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, ஹரே ராதா ஹரே கிருஷ்ணா, இந்திரன் சந்திரன் மற்றும் பாசவலை ஆகிய படங்களைச் சொல்லலாம். இப்படங்களைப் பற்றிய ஒரு சிறு பார்வை.

சலங்கை ஒலி (1983)

கே விஸ்வனாத் இயக்கிய சாகர சங்கமம் தமிழிலும் பெரு வெற்றியைப் பெற்றது. ஆந்திர அரசின் நந்தி விருது, பிலிம்பேர் விருது ஆகியவைகளையும் வென்ற படம் இது. 80களில் ஏன் இப்போதும் கூட பல கல்லூரி விழாக்களில் பரத நாட்டியப் பாடலாக இப்படத்தின் ஓம் நமச்சிவாய எனத் தொடங்கும் பாடல் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இப்படத்தில் கமல் நாட்டிய அழைப்பிதழை பார்க்கும் சீன், ஐந்து வகை நாட்டியங்களை ஆடிக் காட்டுவது, கிணற்றின் நடுவில் செல்லும் பைப்பில் ஆடும் காட்சி போன்றவை பல படங்களில் காமெடிக்கு பயன் படுத்தப் பட்டு வருகின்றன.

ஹரே ராதா ஹரே கிருஷ்ணா (1985)

இளையராஜா இசையில், ஏ கோதண்டராமி ரெட்டி இயக்கி ஒக்க ராதா இதரு கிருஷ்ணலு என்ற பெயரில் வெளியான படம். கமல் – ஸ்ரீதேவி கெமிஸ்ட்ரி இதில் நோபல் பரிசு ரேஞ்சுக்கு இருக்கும். 85 ஆம் ஆண்டு வெளியான அந்த ஒரு நிமிடம், மங்கம்மா சபதம் போன்றவை சரியாகப் போகாததால் இந்தப் படத்தை கமல் நஷ்டப்பட்ட வினியோகஸ்தர்களுக்கு ஈடாக கொடுத்ததாக அப்போது ஒரு பேச்சு உண்டு. காமெடி, காதல், நடனம் என கமல் பின்னி எடுத்த அக்மார்க் தெலுங்கு படம். இங்கும் குறிப்பிடத்தக்க அளவு ஓடி லாபம் கொடுத்தது. கமல், ஸ்ரீதேவி காதல் காட்சிகள்,நடனக் காட்சிகளுக்காவே ரீப்பிட்டட் ஆடியன்ஸோடு ஓடிய படம். இப்படத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம், சமகால தெலுங்கு சினிமாவை (வெள்ளை குதிரையில் ஹீரோ, புதையல் தேடுச் செல்லும் சாகஸம்) சகட்டு மேனிக்கு கிண்டல் அடித்திருப்பார்கள். ஆங்கிலத்தில் ஹாட் ஷாட் போன்ற படங்களில் பயன் படுத்திய உத்தியும் இங்கே பயன் பட்டிருக்கும். தமிழில் அதுபோல் ரங்கநாதன் இயக்கிய ஆஹா என்ன பொருத்தம் படத்திலும், இப்போது குயிக் கன் முருகனிலும் இந்த உத்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அழகிரியின் மகன் தயாநிதி தயாரிக்கும் தமிழ் படம் என்னும் படமும் இந்த வகையிலே படமாக்கப் படுவதாக செய்திகள் வந்துள்ளன.

சிப்பிக்குள் முத்து (1986)

இதுவும் கே விஸ்வனாத் இயக்கிய படமே. சுவாதி முத்யம் என்னும் பெயரில் வெளியாகி கமலுக்கு ஆந்திர அரசின் நந்தி விருது வாங்கித் தந்த படம். கமல் ராதிகா இணையில் அருமையான பாடல்களுடன் வந்து இங்கேயும் வெற்றி பெற்றது.

இந்திரன் சந்திரன் (1990)

89ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் இந்துருடு சந்துருடு என்னும் பெயரில் வெளியாகி பிலிம் பேர் விருது, நந்தி விருது வாங்கிய படம். இங்கேயும் வெளியாகி நன்கு ஓடியது. கமலின் மேயர் கெட்டப்பும், வசன உச்சரிப்பும் அனைவரையும் கவர்ந்தது. கேரள ஜெயலலிதா, குயிலியுடன் மேயர் அடிக்கும் கொட்டமும், விஜய் சாந்தியுடன் இன்னொரு கமலின் காதலும் ரசமானவை.

பாசவலை (1995)

கே விஸ்வநாத்தின் இயக்கத்தில் சுப சங்கல்பம் என்னும் பெயரில் வெளியான படம் . இசை மரகத மணி. கமலின் ஜோடியாக ஆம்னியும், முதலாளி (கே விஸ்வனாத்) மகளாக பிரியா ராமனும் நடித்த படம். இந்தப் படத்தில் கமல், தன் மனைவி இறந்த சோகத்தை மறைத்துக் கொண்டு நடிக்கும் காட்சிகளில் ஆந்திர ரசிகர்கள் காசுகளை திரையில் நோக்கி விட்டெறிந்தார்களாம். எஸ் பி பாலசுப்ரமணியம் இதை தமிழில் வெளியிட்டார். தெலுங்கு அளவுக்கு இங்கு வெற்றியில்லை. இந்தப் படம் ஆந்திர கடலோரப் பகுதி மீனவர் வாழ்வை ஓரளவு பிரதிபலித்த படம். இதில் மீனவர் வாழ்வு பற்றிய நிகழ்வுகளை கமல் மோனோ ஆக்டிங்கில் பிரமாதமாக வெளிப்படுத்தியிருப்பார்.

கமல் நிஜ சகலகலாவல்லவன்-ரஜினி

கமல்ஹாசன் ஒரு நிஜமான சகலகலாவல்லவன், சூப்பர் ஸ்டார் என்று பாராட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

நடிப்பில் பொன் விழா கண்டுள்ள கமல்ஹாசனுக்கு விஜய் டிவி பாராட்டு விழா எடுத்தது. சென்னையில் நடந்த இந்த விழாவில் தென்னிந்தியத் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த் , மம்முட்டி, மோகன்லால், வெங்கடேஷ் உள்ளிட்ட திரையுலகமே திரண்டு வந்து பாராட்டியது.விழாவில், ரஜினி காந்த் பேசுகையில், கமலைப் பற்றி பேச வேண்டுமானால் 2 நாள் வேண்டும். 1975களில் அவர் சூப்பர் ஸ்டாராக இருந்த காலங்களில்தான் நான் தமிழ் சினிமாவிற்குள் வந்தேன். நாங்கள் இணைந்தும் படங்களில் நடித்து கொண்டிருந்த காலம் அது.

இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் என்னை நடிக்க சிபாரிசு செய்தவரே கமல்தான். அவர் நினைத்திருந்தால் என்னை நடிக்க விடாமல் செய்திருக்க முடியும்.

நினைத்தாலே இனிக்கும் படம்தான் நாங்கள் இணைந்து நடித்த கடைசி படம். அப்போது கமல் என்னிடம் சொன்னார். ரஜினி நாம் இனிமேல் இணைந்து நடிக்க வேண்டாம். அப்படி நடித்தால் புகழ் பெயர் வாங்க முடியாது. நீங்கள் உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

தமிழ் சினிமா உலகில் ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறி என்னை உற்சாக மூட்டினார். இது மட்டுமல்ல நாம் பிரிந்தாலும் என் படங்களில் உள்ள கலைஞர்களை நீங்கள் பயன்படுத்துங்கள். உங்கள் படங்களில் உள்ளவர்களை நான் பயன்படுத்துகிறேன் என்று கூறினார்.

சிரஞ்சீவி, அமிதாப், மம்முட்டி, மோகன்லால் எல்லோரும் நினைக்கலாம் கமல் என்ற சூப்பர் ஸ்டார் இருக்கும்போது ரஜினி எப்படி இவ்வளவு பெரிய ஹீரோவானான். நான் கமல் நடிப்பை பார்த்துதான் இந்த அளவுக்கு முன்னேறி உள்ளேன்.

குருநாதர் பாலச்சந்தர் எங்கள் 2 பேரையும் வைத்து இயக்கினார். அப்போது சூட்டிங்கில் கமல் நடித்து கொண்டிருப்பார். நான் அவர் நடிப்பை பார்க்காமல் சிகரெட் பிடிக்க வெளியே சென்றுவிடுவேன். குருநாதர் என்னை தேடுவார். நான் வந்தவுடன் எங்கடா போனே தம் அடிக்கவா? ஏன்டா. கமல் நடிப்பை பாருடா நடிப்பை கத்துக்கோடா என்று கூறுவார்.

அதன் பிறகு கமல் நடிக்கும்போது அவரது நடிப்பை கவனித்தேன். தம் அடிக்க போகவே மாட்டேன். கமல் பாதை வேற மாதிரி. அதை நான் பின்பற்றாமல் எனக்கு வேற ரூட் ஒன்றை போட்டேன் கொஞ்சம் புத்தியை யூஸ் பண்ணினேன்.

நான் நடித்துக் கொண்டிருக்கும் ரோபோ..எந்திரன் படம் கமல் நடிக்க வேண்டிய படம். அவருக்குதான் ஷங்கர் ரெடி பண்ணினார். ஆனால் சில கால தாமதத்தால் இப்போது மாறி போய் உள்ளது. ஷங்கர் ரோபோ பற்றி என்னிடம் கதையை சொல்லும்போது நான் நடிக்கமாட்டேன். இது கமலுக்காக தயார் செய்த கதை. அதில் என்னை கொண்டு வரமுடியாது என்றேன். ஆனால் ஷங்கர் சார் இது உங்களுக்காக வேறு மாதிரி செய்துள்ளேன்.

கமல் உண்மையான சகலகலா வல்லவன். கலையரசி தாய், என்னை, மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி , வெங்கடேஷ் ஆகியோரை கைகளால் பிடித்து கொண்டுள்ளார். ஆனால் கமலை மட்டும் மார்போடு அனைத்து பாதுகாத்து உள்ளார். ஏன் இப்படி செய்கிறீர்கள், என்று நாங்களும் நடிகர்கள்தானே என்று கலையரசியிடம் கேட்டேன்.

அதற்கு அவர் சொன்னார், நீ சினிமாவிற்கு வரவேண்டும் என்று இந்த ஜென்மத்தில்தான் ஆசைபடுகிறாய். ஆனால் கமல் 10 ஜென்மத்திற்கு முன்பே இருந்து ஆசைப்பட்டு கொண்டிருக்கிறார் என்றார் ரஜினி.

ரஜினி நிஜமாவே சூப்பர் ஸ்டார்...

கமல்ஹாசன் பேசுகையில், நான் இந்த விழா சின்னதாக நடக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இது இவ்வளவு மிகப்பெரிய விழாவாக நடக்கிறது. நான் இந்த அளவுக்கு வந்தேன் என்பதற்கு நீங்கள் என்மீது வைத்துள்ள அன்புதான்.

அன்பால்தான் முன்னேறி உள்ளேன். நான் சினிமாவிற்கு வரும்போது நிறைய கனவுகளோடு வந்தேன். ஆனால் அது ஒன்று கூட நிறைவேறவில்லை. என்னால் நிறைவேற்ற முடியவில்லை.

50 வருடம் சாதித்துள்ளேன் என்று கூறுகிறீர்கள் அதற்கு அன்புதான் காரணம். ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார். அவர் தன்னை தாழ்த்தி என்னை உயர்த்தியுள்ளார். அவர் உண்மையான சூப்பர் ஸ்டார்தான். எனக்கும் அவருக்கும் இடையே உள்ள நட்பு ஆழமானது. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நட்பு இல்லை, அதையும் தாண்டியது.

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. நாத்திகன் என்று கூறுகிறார்கள். அந்த வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை. பகுத்தறிவாளன் என்று கூற வேண்டும். என் மகள் எனக்காக தினமும் கடவுளிடம் வேண்டுகிறார். ஆனால் அவரின் அன்பை நேசிக்கிறேன் என்றார்.

எனக்கும் போட்டி-மம்முட்டி:

நடிகர் மம்முட்டி பேசுகையில், கமல் மலையாளத்தில்தான் கதாநாயகனாக அறிமுகமானார் என்பதை நினைக்கும்போது எனக்கு பெருமையாக உள்ளது. அவர் 50 வருட கலை சேவகர், அவருக்கும் எனக்கும் இப்போது போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

அவரும் 3 தேசிய விருது வாங்கியுள்ளார். நானும் வாங்கியுள்ளேன். அடுத்த விருது யார் வாங்கப் போகிறார்கள் என எங்களுக்குள் போட்டி என்றார்.

நடிகர் மோகன்லால் பேசுகையில், இப்போது உள்ள இளம் நடிகர்கள் கமல் போல் நடித்து பேர் புகழ் பெறலாம். ஆனால் கமலாகவே மாற முடியாது. கமல் என்றைக்கும் கமல்தான் என்றார்.

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் பேசுகையில், நான் சென்னை டான் போஸ்கோ பள்ளியில்தான் படித்தேன். லயோலா கல்லூரியில்தான் படித்தேன். அப்போது கமல் படம் என்றால் தியேட்டரில் விசில் அடித்து ஆடி கொண்டிருப்பேன்.

இந்தியன் 10 தடவை, குணா 20 தடவை என அவரின் படங்களை பலமுறை பார்த்துள்ளேன். பார்த்து கொண்டிருக்கிறேன் என்றார்.

கடவுளுக்கு கமல் மீது நம்பிக்கை-இளையராஜா:

இசைஞானி இளையராஜா பேசுகையில், இது குடும்ப விழா. நேற்று சரஸ்வதிக்கு பூஜை இன்று அவரது மகனுக்கு பூஜை. அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் கடவுள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்றார்.

விழாவில் பிரபு தேவா தனது தந்தை சுந்தரத்துடன் இணைந்து கமல் பட பாடலுக்கு நடனம் ஆடினார். மேலும் நடிகைகள் சானா கான், ருக்மணி, ஷோபனா ஆகியோரும் கமல்ஹாசன் பட பாடல்களுக்கு நடனம் ஆடினர்.

நன்றி: www.thatstamil.com

நான் அரசியல்வாதியல்ல - கமல்

உலகநாயகன் கமலின் NDTV பேட்டியின் ஒளிவடிவம். அவரின் கருத்துக்களைச் சில விஷமிகள் வித்தியாசமாக விளங்கிச் சர்ச்சைகளை ஏற்படுத்துகின்றார்கள். குறிப்பாக அவரின் திருமணம் பற்றிய கருத்துக்கு சில பைத்தியங்கள் வேறு அர்த்தம் காண்பிக்கிறார்கள். எல்லாம் பொறாமையின் வெளிப்பாடுதான்.

இன்று கலைக்கு பொன்விழா

உலகநாயகன் பத்மஸ்ரீ டாக்டர் கலைஞானி கமலஹாசன் அவர்கள் களத்தூர் கண்ணம்மாவில் மூலம் திரைக்கு அறிமுகமாகி இன்றைக்கு 50 வருடங்கள்.

கலைஞானிக்கு வாழ்த்துக்கள்.

"கலை" க்கு வயது ஐம்பது

கமல் கலைத்துறையில் கால் தடம் பதித்து ஐம்பது வருடங்கள் நிறைவடைந்தது. அவர் பணி மேலும் மேலும் வளர வாழத்துகிறோம். மேலும் செய்திகளுக்கு
http://in.movies.yahoo.com/news-detail/61278/Kamal-Haasan-50-years-of-Indian-Cinema.html

விருதுகளைக் குவித்த உலக நாயகன்

தசாவதாரம் படத்துக்காக சிறந்த மக்கள் அபிமான ஹீரோ, வில்லன், காமெடியன் மற்றும் திரைக் கதையாசிரியர் என 4 விருதுகளை கமல்ஹாசனுக்கு வழங்கியது விஜய் டிவி.விஜய் டி.வி. ஆண்டுதோறும் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்-நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்குகிறது.

2008-ம் ஆண்டுக்கான விருதுகள் சென்னையில் நேற்று வழங்கப்பட்டன.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த விழாவில் ரசிகர்களின் சிறந்த அபிமான ஹீரோவாக நடிகர் கமலஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.தசாவதாரம் படத்தில் 10 வேடத்தில் நடித்த கமலஹாசனுக்கு அந்தப் படத்தில் பிளெட்சர் என்ற வில்லன் வேடத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் விருதும், பல்ராம் நாயுடு கேரக்டரில் காமெடி செய்ததற்காக சிறந்த காமெடி நடிகர் விருதும், தசாவதாரம் படத்தின் கதையை உருவாக்கியதற்காக சிறந்த கதாசிரியர் விருதும் வழங்கப்பட்டன. 4 விருதுகளையும் மகிழ்ச்சியுடன் கமலஹாசன் பெற்றுக்கொண்டார்.

ஒரு ஹீரோ, ஒரே படத்திற்காக ஹீரோ, வில்லன் மற்றும் காமெடியனுக்கான விருதைப் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.விழாவில் கமலஹாசன் பேசும்போது, 'நான் முதன் முதலில் வில்லனாக நடித்த பிறகே கதாநாயகன் ஆனேன். இந்த வகையில் எனக்கு விலலன் நடிப்புக்காகவும் விருது கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது.

காமெடியை நான் பாலச்சந்தரிடமிருந்தும், நாகேஷிடமிருந்தும் கற்றுக் கொண்டேன். அந்த வகையில் காமெடிக்கான இந்தவிருதினை நாகேஷுக்கும், சக காமெடி கலைஞர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன், என்றார்.

இந்நிகழ்ச்சியில் கமலைப் பற்றி நடிகர் சிவகுமார் பேசியதும் அவரின் மகன் சூரியாவை உலக நாயகன் பாராட்டிப் பேசியது நிகழ்ச்சியின் ஹைலைட். மேடையில் உலக நாயகனின் ஆசிர்வாதத்தை நெடுஞ்சாண் கிடையாக சூரியா பெற்ற காட்சி பலரையும் நெகிழச் செய்தது.

இந்த நிகழ்ச்சியை எதிர்வரும் 18, 19 திகதிகளில் இரவு 7 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்கிறார்கள்.

2008 அதிகம் தேடப்பட்ட "தசாவதாரம்"

தசாவதாரம் அலை தமிழகத்தை மட்டுமே அடித்தது என்று நினைத்தால் அது இந்தியாவையே ஆட்டிப்பார்த்திருக்கிறது.
கூகுள் இந்தியாவில் 2008ல் அதிகம் தேடப்பட்டவைகளில் தகவலை வெளியிட்டுள்ளது. அதில் படங்களின் வரிசையில் தேடப்பட்டவைகளில் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பது தசாவதாரம். இந்தியா முழுதும் தமிழகத்தை திரும்பிப்பார்க்கச் செய்திருக்கின்றது தசாவதாரம் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. முதல் பத்து இடங்களை பிடித்ததில் தசாவதாரம் மட்டுமே தமிழ் படம் மற்ற அனைத்தும் ஹிந்திப்படங்களே என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஹிந்தி பேசும் தொகையை கணக்கில் எடுக்கும் போது தமிழ் படம் ஒன்று இந்த அளவுக்கு முன்னிலையில் தேடப்பட்டுள்ளது சாதாரணமான விடயம் இல்லை. அதுவும் இரண்டாவது நிலையில்.

Most Popular Movies

1. Jodha Akbar
2. Dasavatharam
3. Singh Is King
4. Jaane Tu Ya Jaane Na
5. Jannat
6. Tashan
7. Ganesha
8. Fashion
9. Rock On
10. Race

# Bollywood is the king in India! It’s interesting to see that audience interest is going beyond song and dance sequences.

# Noteworthy is the # 2 slot retained by Tamil cinema.

Source: http://www.google.co.in/press/pressrel/20081210_zeitgeist2008.html

இதற்கு மேலும் ஏதாவது ஆதாரம் வேண்டுமா நம் தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் முன்னேறிக் கொண்டிருப்பதை நிரூபிக்க?

-ஸ்ரீ.