எத்தனை பேர் கமல் படம் பாக்குறீங்க?

படங்களை படங்களாக பார்க்க வேண்டும் என்பது என் கருத்தாக இருந்தாலும் கமல் படங்களின் வெளியீடுகளில் மட்டும் ஒரு சராசரி ரசிகனாக மாறிவிடுவேன். அது முதல் நாள் காட்சி முடிவடையும் வரை தான். அடுத்த நான் நானும் பூதக்கண்ணாடி மாட்டிக்கொண்டு குறை இருக்குதான்னு பாக்க கிளம்பிடுவேன். என்ன தான் நம்ம பையன் தப்பு பண்ணாலும் வலிக்காம ஒரு அடி வைப்போம் இல்லை அந்த மாதிரி கண்டிப்பா எனக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு தெளிவா சொல்லிடுவேன். ஆனால் கமல் என்கிற அந்த நடிகனின் படத்தில் குறைகள் இல்லை என்பதை விட குறைகள் குறைவு என்று சொன்னால் சரியாக இருக்கும். சாதாரணமாக கமலின் படங்களை மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாக தெரியும். கதைக்கும் அந்த காட்சிக்கும் சம்பந்தம் இருப்பது போலவே தெரியாமல் இருக்கும் பல காட்சிகள் இருக்கின்றன. நான் கவனித்த அப்படி சில காட்சிகளை கீழே சொல்லி இருக்கேன். நீங்களும் கவனிச்சிருக்கீங்களா?

* இந்தியனில் மனீஷாவிடம் தன் மகன் முத்தம் தரும்போது மீசை குத்தியதாக சொன்னதால் மீசையை எடுத்ததாய் சொல்வார். அவனை கொன்ற பிறகு போலீசுக்கு தொலைபேசுவார் அப்போது மீசை இருப்பதாக இருக்கும். இது சாதாரண மாறுவேடமாக நினைக்காமல் கொஞ்சம் உள் இறங்கிப்பாருங்கள் அதன் அர்த்தம் புரியும்.

* ஹே ராமில் வசுந்தராவை பெண் பார்க்கப்போகும் போது கோயில் யானை தன் பாகனோடு இருப்பதாக ஒரு காட்சி கமல் கொஞ்சம் பின்னோக்கி தன் வாழ்க்கையை சிந்திக்கும் போது கல்கத்தாவின் கலவரத்தில் தன் பாகனை இழந்த யானையை காண்பிப்பார். அந்த யானை தான் கமல். அப்போது ராணி முக்கர்ஜியின் மரணம் அதையடுத்து நடந்த நிகழ்வுகளை சூட்சுமமாக அந்த ஒரு காட்சியில் பொறுத்தி இருப்பார்.

அந்த யானை பாகன் இறந்த பிறகு அவன் கையில் இருக்கும் அந்த அங்குசம் அதன் காலில் பட்டிருக்கும் அதனால் அது நகராமல் அந்த கலவரத்திலும் அமைதியாக இருக்கும். அந்த அங்குசம் தன் மனைவியின் நினைவு?? அல்லது மிருகத்துக்கு இருக்கும் அறிவு கூட மனிதர்களுக்கு இல்லையே என்பது பொருளா? கமலுக்கே வெளிச்சம்.

பின்னர் அதே படத்தில் "I do not" என்கிற வசனம் ஓரிரு முறை இடம் பெற்றிருக்கும் "I don't" க்கு பதிலாக. சுதந்திரத்துக்குப்பின் தான் "I don't" அதிகமாக புழக்கத்தில் வந்ததென கேள்விப்பட்டேன்.

இதற்கு பெயர் தான் டைரக்ஷன். அவர் பேட்டியில் கூட தான் இன்னும் முழுமையான‌ ஒரு டைரக்டர் ஆகவில்லை என்று தான் சொல்லி வருகிறார். அவர் நடிக்க ஆரம்பித்து டைரக்ட் செய்ய எத்தனை வருடங்களை ஆனது என இப்போது வரும் புது டைரக்டராக மாறிய நடிகர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று.

* ஹே ராமில் இன்னொரு காட்சி. கமல்ஹாசனுக்கு காந்தியை அடுத்து வரும் வாரங்களில் கொலை செய்யச் சொல்லி ஒரு தந்தி வரும். மார்கழி நாளில் திருப்பாவை பாடிக்கொண்டே சிலர் தெருவில் நடந்து போவார்கள். இது டிசம்பர் நடுவில் துவங்கி ஜனவரி பாதி மாதம் வரை போகும். காந்தி சுடப்பட்டது ஜனவரி 30. பிழைகள் இல்லாமல். மன்னிக்கணும். பிழைகள் தவறான வாத்தை. பிசுறு இல்லாமல் படத்தை எடுக்க அவரிடம் பாடம் படித்தே தான் ஆக வேண்டும். கொடிகள் தூக்கிக்கொண்டு சிலர் வரலாம். இது வரலாற்றுப்படம் கதை, கதைக்களம் இதில் சின்ன தவறுக்கூட இடம் கொடுக்காமல் தான் எடுக்க வேண்டும். எடுத்தார். மற்ற கமெர்ஷியல் படத்தில் லாஜிக் இல்லாமல் போனாலும் பாதகம் இல்லை.

* கதாப்பாத்திரங்களுக்கு பெயரிடுவதிலும் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்:

1. மகாநதி படத்தில் ‍ கிருஷ்ணசாமி, நர்மதா, கோதாவரி, யமுனா, காவேரி, பரணி, பஞ்சாபகேசன்.

2. அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லன்களுக்கு அவர்கள் குணாதீசியத்தோடு ஒட்டாத பெயர்கள்.

‍# தர்மராஜ் - ஒரு சின்ன புத்தி அரசியல்வாதி.

# சத்தியமூர்த்தி - பொய் மட்டுமே பேசத்தெரிந்த வக்கீல்.

# நல்லசிவம் - கொலையாளி.

# அன்பரசு - பணக்கார தப்பான காரியங்கள் மட்டுமே செய்யும் ஒரு கதாப்பாத்திரம்.

3. உன்னால் முடியும் தம்பியில் சீதா கதாப்பாத்திரத்தின் பெயர் லலிதா. "இதழில் கதை எழுது நேரமிது" பாடலும் லலிதா ராகம்.

4. இந்தியனிலும் (சுபாஷ்) சந்திரபோஸ், கஸ்தூரி (பா காந்தி) போன்ற பெயர்கள் கொடுக்கப்பட்டது கதாப்பாத்திரங்களுக்கு. சேனாபதி என்ற ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்ன செய்திருப்பாரோ அது அங்கு காட்டப்பட்டது. இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்றாலும் நாம் கவனிக்க வேண்டியது அவரது பர்ஃபெக்ஷன்.


* இந்தியனில் டிராபிக் இன்ஸ்பெக்டரை அடிகும் காட்சியில் அவரை கமல் "சார்ஜென்ட்" அப்படின்னு கூப்பிடுவார். மீண்டும் ஒரு நுணுக்கமான காட்சியமைப்பு.

* வேடிக்கையாக அமைக்கப்பட்ட அதிகம் கவனிக்கப்படாத ஒரு காட்சி பஞ்சதந்திரத்தில். 36 24 36 பாடலில் "இந்தியன் யாரென்று புரியவைப்பேன்" இந்த வரிகளின் காட்சியமைப்பு அவர் அமெரிக்க நகர வீதியில் வாய் கொப்பளித்து துப்புவார். நாம் செய்யறது தானே திருந்துறோமா? திருந்த கூட வேணாம் அது தப்புன்னாவது தோணி இருக்கா?

* விருமாண்டி உண்மை கதையில் பேச்சியம்மாவை பேய்காமனிடடிருந்து காப்பாற்றுவார். அதன் பிறகு விருமாண்டி மாட்டிரைச்சி கேட்க ஆரம்பிப்பார். அதன் பின்னர் அவர் தந்திரமாக கிணற்றுக்குள் மூடப்பட்டு "ஆடி வெள்ளி" வெளிவந்து தன் படையலை எடுத்து கொள்வது போல கதை நகரும். (விருமாண்டி படத்தில் ஒரு வில்லுப்பாட்டு பெரியகருப்பத்தேவரும், இசை ஞானியும் பாடிய ஒன்று அதை கேட்டால் தெளிவாக புரியும்).

அதே போல சின்னக்கோளாறுபட்டி ஆட்கள் நல்லமநாயக்கர் ஊராரை கொலை செய்த பின் அந்த பெண்ணை கிணற்றுக்குள் வைத்து காப்பாற்றுவார் கமல்.

பின் நீதிமன்றத்தில் பொய் சாட்சி சொல்லி தப்பிக்கும் காட்சியில் அந்த மூளை பிசங்கிய பெண் "அடப்பாவி கெணத்துக்குள்ள இருந்தப்ப நல்லவனா இருந்தியேடா. இப்போ இப்படி மாறிட்டியே" என சொல்லி அழும் ஒரு காட்சி உண்டு. இதற்கு டைரக்டோரியல் டச்னு ஒரே வார்த்தையில் புகழ்ந்தா போதுமா? தெரியலை.

*

இப்போ சொல்லுங்க எத்தனை பேர் கமல் படத்த பாக்குறீங்க?

கமல் படத்தை பாக்குறீங்களா இல்லை அது திரையிடப்படும் திரையரங்கில் இருக்கீங்களா?

தொடரும்... (என்னடா தொடரும்னு சொல்றான்னு பாக்காதீங்க. கமல் படங்களை கவனமாக பார்த்தால் நிறைய அழகான அம்சங்களை நான் தவறவிட்டது தெரியும். அவர் படங்கள் வரும் வரையில் இது போல சின்ன சின்ன நுணுக்கங்களை பார்க்கலாம். ஆமாம் நீங்கள் மேலே சொன்னவைகளை கவனித்திருக்கீங்களா? நான் ஏதாவது தவற விட்டுட்டேனா? உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் பின்னூட்டுங்கள். இவை அனைத்தும் நானே சிந்தித்தவைகள் இல்லை. அவ்வளவு சாமர்த்தியமும் இல்லை எனக்கு. சகரசிகர்கள் உடனான பேச்சுக்களின் போது சேகரித்த தகவல்கள்.)

-ஸ்ரீ.

கண்டங்கள் கண்டு ரசிக்கும்...

சகலகலாவல்லவன் தான்

கமல்ஹாசன் என்ன உலகநாயகனா? ஆமாம் கிளிக்கி பாருங்கள்

ஜப்பானில் கல்யாணராமன்..?

ஜப்பானின் பிரபல நடிகர் தடானோபு அசானோவுடன் ஒரு புதிய ஆங்கில-ஜப்பான் மொழிப் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். இந்தப் படத்தில் அசானோவுடன் ஜோடியாக நடிக்கப் போகிறவர் நம்ம ஊர் அசின்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஜன கண மன... இசை ஆல்பத்தை தயாரித்து இயக்கியவர் பரத்பாலா. இவர் தயாரித்து, இயக்கவிருக்கும் படம் 19 ஸ்டெப்ஸ்.

ஆங்கில - ஜப்பானிய மொழிகளில் தயாராகும் இதில் ஹீரோவாக தடானோபு அசானோ நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அசின் நடிப்பார் என்று தெரிகிறது. இவர்களுடன் முக்கியப் பாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது. பரத் பாலா, வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளார். மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய கதை இது.

9-ம் நூற்றாண்டில் கேரளாவில் நடக்கும் இந்தக் கதையில் கேரளாவின் பாரம்பரிய தற்காப்புக் கலையான களரிப்பயட்டுவை அசானோவுக்கு கற்றுத் தரும் கவுரவ வேடத்தில் நடிக்கிறாராம் கமல்.

இந்த வித்தையைக் கற்றுக் கொண்டு, அதன் மூலம் தனது எதிரிகளை அசானோ வீழ்த்துகிறாராம்.

அசினுக்கு இதில் கேரளா ராணி வேடம். களரிப் பயட்டு கற்க வரும் அசானோவுக்கு காதல் பயிற்சி அளிக்கும் கவர்ச்சி ராணி இவர்.

இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இவ்வளவு தகவல்கள் உறுதியாகக் கூறப்பட்டாலும், படத்தில் நடிப்பது குறித்து கமல் இன்னமும் உறுதியாக எதையும் தெரிவிக்கவில்லை.

அவரது மீடியா மேனேஜர் நிகில் முருகனும் இது குறித்து இப்போது எதுவும் கூறுவதற்கில்லை என்கிறார்.


நன்றி :http://thatstamil.oneindia.in/movies/heroes/2008/08/12-kama-asin-in-a-japanese-film.html

முத்தம் - மீசை - கமல்


"விதம் விதமான மீசைகள் எனக்குப் பிடிக்கும். அதனால்தான் படத்துக்குப்படம் மீசையை மாற்றுகிறேன்'' என்று கமலஹாசன் கூறினார்.

பொதுவாக ஆலிவுட் நடிகர்கள் மீசை வைத்துக் கொள்வதில்லை. தேவைப்பட்டால் சரித்திர கால படங்களுக்கு தாடி-மீசை வைத்துக் கொள்வார்கள். வடநாட்டில் திலீப்குமார், தேவ்ஆனந்த், அசோக்குமார் ஆகிய நடிகர்களுக்கு மீசை கிடையாது. படங்களில் கூட பெரும்பாலும் மீசை இல்லாமல் நடிப்பார்கள். ராஜ்கபூருக்கு மட்டும் அரும்பு மீசை உண்டு!

தமிழ்நாட்டின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.தியாகராஜ பாகவதர் மீசை வைத்துக்கொள்ளவில்லை. "சியாமளா'' என்றஒரு படம் தவிர மற்ற படங்களில் மீசை இல்லாமல்தான் நடித்தார். பி.யு.சின்னப்பா பெரும்பாலான படங்களில் மீசையுடன் நடித்தார். ஆனால் சொந்த வாழ்க்கையில் மீசை கிடையாது! டி.ஆர்.மகாலிங்கமும் இதே போல் படங்களில் மட்டும் அரும்பு மீசையுடன் நடித்தார். வாழ்க்கையில் மீசை கிடையாது.

வாலிப பருவம் அடைந்தது முதல், பெரும்பாலான படங்களில் கமலஹாசன் மீசையுடன் நடித்துள்ளார். அதுவும், படத்துக்குப்படம் மீசை மாறுபடும். அரும்பு மீசை முதல் அய்யனார் மீசை வரை பலவித மீசைகள் அவர் முகத்தை அலங்கரித்து இருக்கின்றன!

மீசை மீது தனக்குள்ள `காதல்' பற்றி அவர் ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

"ராபர்ட் ரெட்போர்ட் என்ற நடிகரின் மீசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் நடித்த ஒரு படத்தில் மேல் உதடு முழுவதும் கவராகியிருக்கும். கீழ் உதடு மாத்திரம்தான் தெரிந்தது! அந்த மாதிரி மீசை வைக்கணும் என்று முயற்சி பண்ணினேன். ஆனால் என் உதடு ரொம்பப் பெரிசு! இந்த உதட்டை மறைக்கணும் என்றால் சவுரிதான் கட்டணும்!

முதன் முதலில் தொங்கு மீசை பேஷன் வந்தபோது, தமிழ் சினிமாவில் அந்த மீசையுடன் கதாநாயகனாக வந்தவன் நான்தான். "சொல்லத்தான் நினைக்கிறேன்'' படத்தில் எனக்கு மீசையை ஷேவ் பண்ணிவிட்டுச் சின்னதாக வைத்து விட்டார்கள். அதனால் எனக்கு ரொம்ப வருத்தம்.

அதற்குப் பிறகு "அபூர்வ ராகங்கள்'' படத்தின்போது டைரக்டர் பாலசந்தர் சாரிடம், `ஒரிஜினல் மீசையே வைத்துக் கொள்கிறேன். ஒட்டு மீசை என்றால் சிரிக்க முடியவில்லை' என்று சொன்னேன். "மன்மதலீலை'' படத்தையும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் பண்ணினேன். "மன்மதலீலை''யில்தான் முழுமையாக மீசையைக் கீழே இறக்கிவிட்டேன். பலபேருக்குக் கோபம். `ஏன் இந்த மாதிரி மீசை வைக்கிறே? கதாநாயகனாக நடிக்கணும் என்று ஆசைப்படுறே. ஏன் இப்படியெல்லாம் மீசை வைச்சுக்கிறே? சிவாஜி சாரைப் பாரு, எம்.ஜி.ஆரைப் பாரு' என்று சொல்வார்கள்.

அதற்குப் பிறகு வந்தவர்கள் நிறையபேர் என்னைப் போல மீசை வைத்துக் கொண்டார்கள். அப்படி மீசை வைத்துக்கொண்டு புருவத்தைத் தூக்கினால் அவர்களே என்னை மாதிரி இருப்பதாக எனக்குத் தோன்றும். எல்லோரும் இப்படி வைக்கிறார்களே என்று ஒரு கட்டத்தில் மீசையையே எடுத்துவிட்டேன்!

உள்ளூரில் எடுத்தால் என் மனசை மாற்றிவிடுவார்கள் என்று வெளிநாடு போய்விட்டேன். ஆம்ஸ்டர்டாம் நகருக்கு நானும் என் மனைவி சரிகாவும் போயிருந்தோம். அங்கே திடீரென்று ஒருநாள் மீசையை எடுத்துவிட்டேன். சரிகாவுக்கு ஒரே சந்தோஷம். `ரொம்ப நல்லா இருக்கு. இந்த முகத்தை நான் பார்த்ததே இல்லையே' என்று சொன்னாள்.

நாலு ஐந்து ஸ்டில்ஸ் எடுத்தாள். எனக்கு மீசை இல்லாமல் பர்ஸ்ட் பிலிம் டெஸ்ட் எடுத்தது சரிகாதான். அதை எடுத்து வந்து முதன் முதலாக டைரக்டர் சிங்கிதம் சீனிவாசராவ் சாரிடம்தான் காட்டினேன். `என்னுடைய புஷ்பக்கிற்கு இதுதான் எதிர்பார்த்த முகம்' என்று சொல்லிவிட்டார். அதுமாதிரியே மணிரத்னமும், "நாயகனில் முதல் பாதிக்கு இந்த முகத்தை வைச்சுக்கலாம்'' என்று சொன்னார்.

ஒல்லியாக இருக்கும் போது - ரொம்ப சின்னப்பையனாக இருக்கும்போது நம்முடைய ஸ்டேட்டசை நிலை நிறுத்திக் கொள்வதற்கோ, பாடி பில்டிங்கிற்காகவோ முதல் ஸ்டேஜிலேயே பெரிதாக பளிச்சென்று காட்டிக்கொள்ள உதவுவது மீசைதான்.

நான் அப்போது டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தேன். ஒல்லியாக இருப்பேன். இந்த காம்ப்ளெக்சைப் போக்குவதற்கு மீசை பெரிதாக வைத்துக்கொண்டால் என்ன என்று தோன்றியது. அதற்குப் பிறகு நெஞ்சில் முடி வளரவில்லையே என்று குனிந்து குனிந்து பார்த்துக் கொண்டிருப்போம். நெஞ்சில் முடி வளர்ந்தால்கூட நல்ல உடல் கட்டு இருந்தால் பெட்டராக இருக்கும் என்று உடற்பயிற்சி பண்ணுவதில்லையா? அந்த மாதிரி வரிசையில் இந்த மீசையும் ஒன்றுதான்.

மீசை என்று சொன்னால் ம.பொ.சி.யை மறக்க முடியாது. ம.பொ.சி. மீசை பற்றி ராஜாஜி சொன்னதாக, சிவாஜி ஒருமுறை சொன்னார். மீசையோடு ம.பொ.சி. வர்றார்னு சொல்லாமல் `மீசைக்குள்ளே ம.பொ.சி. வருகிறார்'னு சொன்னாராம் ராஜாஜி.

பாரதியார் மீசை எனக்குப் பிடிக்கும். பாரதியார் மீசை மாதிரியேதான் எங்க மாமாவோட மீசையும். பெரியாருடைய பஞ்சு மாதிரி தாடியும் மீசையும் எனக்குப் பிடிக்கும். எனக்கு என்னமோ ரொம்ப மெல்லிசான மீசை மேல் அவ்வளவு விருப்பம் கிடையாது. ஹிட்லர் மீசை எனக்குப் பிடிக்கும். ஆனால் காமெடியன்கள் நிறைய பேர் அதை வைத்து விட்டதால், அதை மதிப்பாக நினைக்க முடியவில்லை.''

மீசை மாதிரியே கமலுக்கு ஆர்வம் அளிக்கும் இன்னொரு விஷயம் முத்தம்!

"சட்டம் என் கையில்'' படத்தில்தான், கமலின் முத்தக்காட்சி முதன் முதலாக இடம் பெற்றது. அந்தப் படத்தில், காதரின் என்ற ஆங்கில நடிகைக்கு முத்தம் கொடுத்தார். இக்காட்சி மிகவும் பரபரப்பை உண்டாக்கியது. இதே கதை, "யேதா கமால் ஹோகயா'' என்ற பெயரில் இந்தியில் தயாராகியது. அந்தப் படத்திலும் கமலின் முத்தக்காட்சி இடம் பெற்றது. "புன்னகை மன்னன்'' படத்தில் ரேகாவுக்கும், "சாணக்யன்'' படத்தில் ஊர்மிளாவுக்கும், "மகாநதி''யில் சுகன்யாவுக்கும், "தேவர் மகன்'', "குருதிப்புனல்'' ஆகிய படங்களில் கவுதமிக்கும் முத்தம் கொடுத்தார்.

முத்தம் பற்றி கமல் கூறியிருப்பதாவது:-

"ஒரு தாய் தன் மகளுக்கும், மகனுக்கும் முத்தம் கொடுக்கிறார். சிறு குழந்தைக்குப் பலரும் முத்தம் தருகிறார்கள். ஆழமான காதலையும், அன்பையும் காட்ட முத்தம் நியாயமானதே. "புன்னகை மன்னன்'' படத்தில் வரும் முத்தக்காட்சி, என்னைப் பொறுத்தவரை சாதாரண விஷயம். "வனமோகினி'' (எம்.கே.ராதா - தவமணிதேவி முத்தக்காட்சி இடம் பெற்ற படம்) காலத்திலேயே முத்தக்காட்சி வந்துவிட்டது. எனவே இதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை.

முத்தக்காட்சி தவறானதோ, பாவச் செயலோ அல்ல. அதைப் பயன்படுத்துகிற முறையைப் பொறுத்து, அந்தக் காட்சி அழகானதாகவே மாறும். எல்லோருக்குமே முத்தம் பொதுவானது! பல் வலி உள்ளவர்களுக்கு மட்டுமே இது விதிவிலக்கு!''

இவ்வாறு கமலஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

(நன்றி : தினத்தந்தி)

கமலஹாசன் கலகல கன்னிப்பேட்டி

"இந்த பேட்டி சுவாரசியமாக இருக்காது..!"

திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததுமற்றொரு முறை 'ஹைஜம்ப்' செய்யப் போய், கையை ஒடித்துக்கொண்டது கோவளம் கடற்கரையில் நடந்த 'அன்னை வேளாங்கண்ணி' படப்பிடிப்பின் போது, கடலினுள்ளே ஆறு மைல் தூரம் வரை சென்று, பயங்கர அலைகளில் சிக்கி உயிர் தப்பியது

இப்படிப் பல 'ஆக்ஸி டெண்ட்'டுகளிலிருந்து தப்பி படவுலகிலும் 'ஆக்ஸிடெண்ட்'டலாக நுழைந்தவர்தான், இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்த நடிகர் கமலஹாசன்.



''எங்கள் குடும்ப நண்ப ரான டாக்டர் சாரா, ஏவி.மெய்யப்ப செட்டி யார் வீட்டில் நடந்த ஒரு விருந்துக்கு என்னையும் அழைத்துக் கொண்டு போனார். செட்டியார் தம்பதிக்கு என்னை மிகவும் பிடித்துப் போய்விட்டது. அப்போது செட்டியார் 'களத்தூர் கண்ணம்மா' என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அதிலே தான் என்னை ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். 'எனக்கும் சினிமாவிலே நடிக்க சான்ஸ் வரும், நானும் நடிப்பேன்' என்று முன்னே பின்னேகூட நான் நினைத்ததில்லை. பை ஃப்ளூக், அந்த சான்ஸ் எனக்குக் கிடைச்சுது...'' என்று இரு கைகளையும் மேலே தூக்கிக் காண்பிக் கிறார் கமலஹாசன்.



அன்று, 'களத்தூர் கண்ணம்மா', 'பாத காணிக்கை', 'பார்த்தால் பசி தீரும்' படங் களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த மாஸ்டர் கமலஹாசன், இன்று 'அரங்கேற்றம்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படங்களில் இளம் தலைமுறை நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார்.

''சின்னக் குழந்தையாகவும் இல்லாம, பெரிய ஆளாகவும் இல்லாம சில காலம் நடுவிலே அகப்பட்டுத் திண்டாடினேன். முகத் திலேயும் அப்போதுதான் பூனை மீசையிருந்தது. சினிமாவிலே சான்ஸ் இல்லாதபோது டிராமா லைன்லே கொஞ்ச நாள் இருந்தேன். டி.கே.எஸ். குழுவிலே சேர்ந்து, 'அப்பா வின் ஆசை' டிராமாவிலே நடிச்சுக்கிட்டிருந்தேன். அப்படியும் சும்மா இருக்க இஷ்டமில்லாம திரு. நடராஜனிடம் டான்ஸ் கத்துக் கிட்டேன்.

யாரும் செய்யாத ஒண்ணை நாம செய்யணும் கிற ஆசையிலேதான் டான்ஸ் கத்துக்கிட்டு பிரபல டான்ஸ் டைரக்டர் தங்கப்பன்கிட்டே அஸிஸ் டென்ட் டைரக்டரா மறுபடியும் பட உலகத்திலே நுழைஞ்சேன். அவரோடு நிறைய படங்களிலே ஓர்க் பண்ணியிருக்கிறேன். அவர் எடுத்த 'அன்னை வேளாங் கண்ணி' படத்திலே அஸிஸ்டென்ட் டைரக்டரா, அப்ரென்டிசா இருந்து சுத்துக்கிட்டேன்.



'நான் ஏன் பிறந்தேன்' படத்திற்கு டான்ஸ் ஒர்க் பண்ணும்போது திரு. எம். ஜி.ஆரோடு பழகக்கூடிய சான்ஸ் கிடைச்சுது. அவர் என் 'பாடி'யை பில்ட் அப் பண்ணுவதற்கு சில 'எக்சர்சைஸஸ்' எல்லாம் கத்துக் கொடுத்தார். அதைத் தினமும் இப்போ கூட செய்துகிட்டு வரேன்...'' என்று கூறும் கமலஹாசன் தன் 'பாடி'யை நன்றாக 'பில்ட் அப்' பண்ணி 'ஸ்மார்ட்' ஆகத்தான் வைத்திருக்கிறார்.

அண்மையில் வெளிவந்துள்ள 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில் ஒரு டான்ஸராக வந்து, 'யூ டோண்ட் நோ' என்று பாடி அமர்க்களம் செய்திருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்குக் கிடைத்திருப்பது கவர்ச்சி வில்லன் வேடம்!



இந்த மாதிரி கேரக்டரை இவர் நன்றாகச் செய்திருப்பதைப் பார்த்து, இனிமேல் இவரை 'புக்' செய்யும் தயாரிப்பாளர்களும் இதே மாதிரி 'ஸ்டீரியோ டைப்' ரோல்களைக் கொடுத்தால்..?

''எந்த ரோல் வந்தாலும் ஏற்றுக் கொண்டு ஒரு 'நல்ல நடிகன்'னு பேர் வாங்கணும் என்பதுதான் என் லட்சியம். டைரக்டர் பாலசந்தர் கூட எனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார். 'இதே மாதிரி 'ரேப்' பண்ற ரோலா உனக்குக் கொடுப்பாங்க. காலையிலே ஒரு செட்டிலே பிரமீளா, சாயங்காலம் இன்னொரு செட்டிலே ஜெயசுதா, அப்படின்னு..! 'ரேப்' பண்ற ஸீனாவே நடிச்சு இதை 'கன்டினியூ' பண்ணாதே. அதுக்குன்னு வில்லன் ரோல் வந்தா வேண்டாம்னும் சொல்லாதே! நல்ல ரோல் வந்தா விடாதே'ன்னு சொல்லியிருக்காரு'' என்று 'பெல்பாட்டம் பேண்ட்' மடிப்பை இழுத்துவிட்டுக் கொண்டே சொல்கிறார் கமலஹாசன்.

கமலஹாசன் ஹீரோவாக நடித்த, 'உணர்ச்சிகள்' என்ற படம் இன்னும் வெளிவரவில்லை. காரணம், பட விநியோகஸ்தர்கள் தான். அந்தப் படத்தில் பாடல்கள் கிடையாது. செக்ஸ் கிடையாது. ஹீரோ கமலஹாசன்; ஹீரோயின் எல்.காஞ்சனா. இரண்டு பேருமே வழக்கமாக இல்லாத புதுமுகங் கள். அவ்வளவுதான், விநியோகஸ் தர்கள் பின்வாங்கிவிட்டார்கள். பாவம், படத் தயாரிப்பாளர் என்ன செய்வார்? அதற்காக இப்போது ஆட்டம், பாட்டு என்று எல்லா மசாலாக்களையும் சேர்த்து மறுபடியும் எடுக்கிறார்களாம். இதைக் கூறி வருத்தப்படுகிறார் கமலஹாசன்.

'' இப்ப நான் கொடுத்திருக்கிற பேட்டி அவ்வளவா சுவாரசியமா இருக்காதுன்னு நினைக்கிறேன். ஏன்னா, நான் இன்னொரு ஆர்ட்டிஸ்டைப் பத்திக் குறை சொல்லலை. யாரையும் தாக்கவே இல்லை. 'இவர் எனக்கு மரியா தையே கொடுக்கலே', 'அவர் என்னை மதிக்கலை'ன்னு வழக்கமா எல்லாரும் சூடா சொல்ற மாதிரி நான் சொல்லவே இல்லை. அப்படியிருக்கறச்சே எப்படி இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்?
குழந்தையிலேருந்து இந்த ஃபீல்டுலே இருக்கேன். இது வரைக்கும் எல்லோர்கிட்டேயும் மரியாதையா நடத்துக்கறேன். எனக்கும் எல்லாரும் மரியாதை கொடுக்கறாங்க. அதனாலே யாரையும் திட்டறதுக்கு சான்ஸே கிடையாது'' என்று நகைச்சுவை யாகப் பேசுகிறார் கமலஹாசன்.

சினிமா உலகத்தில் அனைவரும் இவருக்கு நண்பர்கள்.

இளமையான தோற்றம், அளவான உயரம், கலையார்வம், படவுலகில் 15 வருட அனுபவம் எல்லாம் அமையப் பெற்றிருக்கும் கமலஹாசனுக்கு ஒரு நல்ல பிரகாசமான எதிர்காலத்தைத் தமிழ்ப் படத்தயாரிப்பாளர்கள் உருவாக்கித் தராமலா போய் விடுவார்கள்?

இந்தவார விகடன் பொக்கிசத்தில் வெளியாகிய நம்ம உலக நாயகனின் 23.2.1973 விகடனில் வெளிவந்த கன்னிப்பேட்டி.

ரஜினியுடன் ஏற்பட்ட நட்பு நிரந்தரமானது!


"ரஜினிக்கும் எனக்கும் ஏற்பட்ட நட்பு, ஆழமானது; நிரந்தரமானது'' என்று கமலஹாசன் குறிப்பிட்டார்.

கமல் கதாநாயகனாக நடித்த "அபூர்வ ராகங்கள்'' படத்தில் ரஜினி ஒரு சிறு வேடத்தில் அறிமுகமானார். தொடர்ந்து இருவரும் 15 படங்களில் சேர்ந்து நடித்தனர்.

அந்தப் படங்கள் வருமாறு:- (1) அபூர்வ ராகங்கள், (2) மூன்று முடிச்சு, (3) அவர்கள், (4) 16 வயதினிலே, (5) ஆடுபுலிஆட்டம், (6) இளமை ஊஞ்சலாடுகிறது, (7) அவள் அப்படித்தான், (8) அலாவுதீனும் அற்புத விளக்கும், (9) நினைத்தாலே இனிக்கும், (10) தப்புத்தாளங்கள், (11) தில்லுமுல்லு, (12) நட்சத்திரம், (13) தாயில்லாமல் நானில்லை, (14) சரணம் ஐயப்பா, (15) உருவங்கள் மாறலாம்.

இருவருக்குமே தனித்தனியாகப் பெரிய ரசிகர் கூட்டம் சேர்ந்தது. தொடர்ந்து இருவரும் சேர்ந்து நடிப்பது, இருவர் முன்னேற்றத்துக்கும் நல்லதல்ல என்ற முடிவுக்கு இருவருமே வந்தனர். அதனால் இருவருமே சேர்ந்து, பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டினார்கள். "இனி நாங்கள் தனித்தனியாகவே நடிப்போம். சேர்ந்து நடிக்கமாட்டோம்'' என்று அறிவித்தார்கள்.

இது, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவாக அமைந்தது. கமலும், ரஜினியும் தனித்தனியே பல வெற்றிப்படங்களை கொடுத்தனர். கமலஹாசன் "உலக நாயகன்'' என்றும் "கலைஞானி'' என்றும் புகழ் பெற்றார். ரஜினிகாந்த் "சூப்பர் ஸ்டார்'' என்று போற்றப்படுகிறார்.

தமிழ்த் திரைப்பட உலகின் முதல் சூப்பர் ஸ்டாராக எம்.கே.தியாகராஜ பாகவதர் திகழ்ந்தபோது, இரண்டாவது சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார் பி.யு.சின்னப்பா. இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. இருவருக்கும் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. யார் சிறந்த நடிகர் என்பதில், ரசிகர்கள் மோதிக்கொள்வதுண்டு.

"பாகவதரைப்போல சின்னப்பாவால் பாட முடியுமா?'' என்று பாகவதர் ரசிகர்கள் கேட்பார்கள். "சின்னப்பாவைப்போல பாகவதரால் நடிக்க முடியுமா?'' என்று சின்னப்பா ரசிகர்கள் கேட்பார்கள். ரசிகர்கள்தான் இப்படி மோதிக் கொள்வார்கள் என்றாலும், பாகவதரும் சின்னப்பாவும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர்.

பிறகு எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சூப்பர் ஸ்டார் ஆனார்கள். இருவரும் நாடகங்களில் நடித்து வந்தபோதே, வறுமையை பங்கிட்டுக்கொண்டு, அண்ணன்-தம்பி பாசத்துடன் பழகியவர்கள். சினிமாவில் புகழ் பெற்ற பிறகும், இந்தக் குடும்பப் பாசம் தொடர்ந்தது. இருவரும் "கூண்டுக்கிளி'' என்ற ஒரே படத்தில் நடித்தார்கள். அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. தனித்தனி பாணியில் நடித்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தார்கள். "இருவரில் யார் வசூல் சக்ரவர்த்தி'' என்பது குறித்து எம்.ஜி.ஆர். ரசிகர்களும், சிவாஜி ரசிகர்களும் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். மதுரையில், ரசிகர்களின் ஆவேசம் கத்திக்குத்து வரை போனது உண்டு. ஆனால் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் கடைசிவரை அண்ணன் - தம்பியாகவே பழகினார்கள்.

இன்று உச்ச நட்சத்திரங்களாகத் திகழும் கமலுக்கும், ரஜினிக்கும் தொழில் போட்டி இருந்தாலும், பொறாமை கிடையாது. "உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?'' என்று ரஜினியிடம் கேட்டபோது, "கமலஹாசன்'' என்று ரஜினி கூறியிருக்கிறார். கமல், தான் நடிக்கும் படங்கள் முடிவடைந்தபின் ரஜினிக்கு போட்டுக் காட்டுவார். இதேபோல் ரஜினி தன் படங்களை கமலுக்கு திரையிட்டுக் காண்பிப்பார்.

ரஜினியுடன் உள்ள நட்பு பற்றி ஒரு பேட்டியில் கமல் கூறியிருப்பதாவது:-

"எனக்கு ராஜன் என்கிற நண்பர் இருந்தார். 28 வயதிலேயே அவருக்கு கேன்சர். மரணத்தின் நிழல் அவர் மீது விழ ஆரம்பித்த நேரம்.

ஒருநாள் என்னுடன் ஷூட்டிங் ("அபூர்வ ராகங்கள்'') பார்க்க வந்தார். மேக்கப் அறையில் அமர்ந்திருந்தோம். அப்போது, சரேலென கதவைத் திறந்து கொண்டு ரஜினி உள்ளே நுழைந்தார். "குட்மார்னிங் கமல் சார்'' என்று `விஷ்' பண்ணிவிட்டு, படு ஸ்டைலாக மின்னல் மாதிரி நடந்து போனார்.

ராஜனும், ஏறக்குறைய ரஜினி மாதிரி இருப்பார்! "கமல்! இது யாரு? என்னை மாதிரியே இருக்கிறாரே!'' என்று கேட்டார், ராஜன். "இவர் பெயர் சிவாஜிராவ்! புதுசா நடிக்க வந்திருக்கிறார்!'' என்றேன். இது நடந்து 3 மாதங்களில் என் இனிய நண்பர் ராஜன் இறந்து போனார். அன்று முதல் ரஜினிதான் எனக்கு ராஜன்! அதாவது ஆப்த நண்பர்.

என்றைக்கு அவர் (ரஜினி) மேக்கப் அறையின் கதவைத் திறந்து வேகமாக உள்ளே வந்தாரோ, அன்றே என் மனக்கதவையும் திறந்து உள்ளே நுழைந்து விட்டார்!''

இவ்வாறு கூறிய கமல், இன்னொரு கட்டுரையில் ரஜினி பற்றி கூறியிருப்பதாவது:-

"நானும் ரஜினியும் சேர்ந்து நிறைய படங்களில் நடித்தோம். நல்ல நல்ல படங்கள் செய்தோம். "நினைத்தாலே இனிக்கும்'' படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் போயிருந்தபோது, டைரக்டருக்குத் தெரியாமல், இரவெல்லாம் ஊர் சுற்றி, திரிந்து விட்டு, அதிகாலை நான்கு மணிக்கு திருட்டுத்தனமாய் பூனை மாதிரி ஓட்டலுக்குள் ஓடி ஒளிவோம். மறுநாள் ஷூட்டிங் நேரத்தில் தூக்கம் ஆளைத் தூக்கி சாப்பிடும். ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து தூங்கி வழிவோம்.

ரஜினியும், நானும் நண்பர்களாக இருந்தாலும், எதிர் எதிர் துருவங்கள்தான். கடவுள் நம்பிக்கையில், வாழ்க்கை முறையில், நடிக்கிற படங்களில், தேர்ந்தெடுக்கப்படுகிற கதைகளில், பொழுதுபோக்குகளில் என, நானும் ரஜினியும் அப்படியே வெவ்வேறு ரசனைகளும், விருப்பங்களும் கொண்டவர்கள்.

அதுபற்றிப் பேசும்போது, இருவருக்கும் பல கருத்து வேறுபாடுகள் வந்ததுண்டு. ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் இருவருக்கும் ஒற்றுமை உண்டு. அது, நாங்கள் செய்யும் தொழிலான சினிமா பற்றிய பயம்!

ரஜினி, தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும், "இதுதான் நமது முதல் படம்'' என்கிற பயபக்தியுடன் கவனம் எடுத்துச் செய்வார். நானோ, "இதுதான் நான் செய்கிற கடைசிப்படம்'' என்கிற வெறியுடனும், வேகத்துடனும் உழைப்பேன். எங்களிடையே ஏற்பட்ட அன்பு, எப்போதும் அப்படியே இருக்கிறது. எங்களுக்குள் ஈகோ எதுவும் கிடையாது.''

மேற்கண்டவாறு கமல் குறிப்பிட்டுள்ளார்.

(நன்றி : தினத்தந்தி)

"மர்மயோகி விலகும் மர்மங்கள்"


இதுவரை வெளியான அனைத்துப் படங்களின் உலக வசூலை முறியடித்து ஒடிக்கொண்டிருக்கும் "தசாவதாரம்", தமிழ் சினிமாவைத் தயாரிப்புரீதியாகவும், படைப்புத்திறன் சார்ந்தும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறது. இதன்மூலம் உலக மொழிப் படங்களில் நடிக்காவிட்டாலும் "உலக நாயகன்" என்று தன் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கமலுக்கு அந்தப் பட்டம் பொருந்திப் போய் விடுகிறது.

"தசாவதாரம்" படத்தில் கமலின் பெரு முயற்சியால் படைப்பாளிக்கும், தயாரிப்பாளருக்கும் எப்போதுமிருக்கும் பட்ஜெட் முரண் பெருமளவு குறைக்கப்பட்டிருக்கிறது. அதன் பலனையும் அறுவடை செய்ய கமலுக்கே வாய்ப்புக் கிடைத்திருக்கிறது, "மர்மயோகி" படத்தின் மூலம். இதுவரை எந்தத் தமிழ்ப் படத்துக்கும் இல்லாதவாறு மர்மயோகியின் பட்ஜெட் 150 கோடி என்று கணக்கிடப்பட்டிருப்பது தமிழை விரித்து, உலகைச் சுருக்கும் முயற்சியாகவே இருக்கிறது.

இன்னும் "மர்மயோகி" யின் தயாரிப்பும், படப்பிடிப்பும் முழுமையாக டிசைன் செய்யப்படாத நிலையில் அங்கே என்னதான் நடக்கிறது என்ற ரசிகக்கவலையில் கொஞ்சம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வியப்பானவை. அவை "மர்மயோகி"யின் மர்மத் திரையைக் கொஞ்சம் விலக்கிவைக்கவும் செய்பவை.

"மர்மயோகி" யைத் தயாரிக்க பிரமிட் சாய்மீராவுடன் ராஜ்கமலும் கைகோர்ப்பது ஒருபுறமிருக்க, படத்தின் அசாத்திய பட்ஜெட்டுக்குத் தோள்கொடுக்க ஹாலிவுட்டின் 'வால்ட்டிஸ்னி'யும் தமிழுக்குள் வரவிருக்கிறது.

கமலே இயக்கவிருப்பதால், படைப்பு சார்ந்தும் படத்தை ஹாலிவுட் படங்களின் நேர்த்திக்கு உருவாக்கும் முயற்சியிலிருக்கிறார் அவர். நவீன தொழில்நுட்பத்துடன் படம் தயாராவதால் லேட்டஸ்ட் வசதிகள் கொண்ட "ரெட்" என்ற ஹைடெமினிஷன் கேமராவை இந்தப்படத்தில் கமல் பயன்படுத்தவிருக்கிறார். "4கே ரெசொல்யூஷன்" திறன் கொண்ட அதன் ஒருநாள் வாடகை 30 ஆயிரம் ரூபாய் என்றிருக்க அந்தக் கேமராவை இந்தப்படத்துக்காக சொந்தமாக விலைகொடுத்தே வாங்கிவிட்டாராம் கமல். அதன் விலை 45 லட்சம்.

சரி....... கதை?

ஏழாம் நூற்றாண்டில் நடப்பதாகச் சொல்லப்படும் "மர்மயோகி"யின் கதையில் அந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அரசவம்சததை வேரறுக்க நினைக்கும் இன்னொரு வம்ச அரசியாக ஹேமாமாலினி வருகிறார். அதாவது கதையின் வில்லி அவர்தான்.

அவரால் அழிக்கப்படும் வம்சத்தில் எஞ்சியிருக்கும் ஐந்து வயது வாரிசை மீண்டும் அரியணை ஏறவைக்க அந்த ராஜ்ஜியத்தின் தளபதி போராடும் கதையைத்தான் மர்மயோகியில் சொல்லப்போகிறாராம் கமல். தளபதி வேறு யாருமில்லை. கமலேதான்...! அதற்காக கருகருவென்று தாடி வளர்த்து கொண்டிருக்கிறார் அவர்.

மெல்கிப்ஸனின் 'கிளேடியேட்டர்', 'பிரேவ்ஹார்ட்' படங்களையொத்த உருவாக்கம் இருக்குமாம். கமல் தன்னுடன் நடிக்க பத்மபிரியாவைக் கேட்டிருக்கிறார். 'கமலுடன் நடிக்கக் கூலி' என்றால் கசக்குமா என்ன? ஒத்துக்கொண்டு அக்ரிமென்டில் கையெழுத்திட ஆர்வமாகக் காத்துக் கொண்டிருக்கிறார் பத்மபிரியா.

படப்பிடிப்பு இந்தியாவில் ராஜஸ்தானிலும், பெரும்பகுதி ஸ்விட்சர்லாந்திலும் எடுக்கப்படவிருக்கிறது. படப்பிடிப்பு இடைஞ்சல்லில்லாமல் நடைபெறுவதற்காகவும், ரம்மியமான ஒளிப்பதிவுக்காகவும் ஸ்விட்சர்லாநதைத் தேர்ந்தெடுத்திருக்கிறாராம் கமல். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் உருவாகின்றன.

"மர்மயோகி" யின் தொடக்க விழாவில் கலந்துகொள்ளும் பாக்கியம்தான் தமிழ்ப் பத்திரிக்கையாளர்களுக்கு இருக்குமோ இருக்காதோ தெரியவில்லை. ஆமாம்... படம் தொடங்கப் போவது மும்பையில். அந்த மர்மத்தையும் விரைவில் கமல் விலக்கினால் நலம்.

நன்றி: குங்குமம் (14.08.08)

தசாவதாரம் - 50வது நாள்!