முத்தம் - மீசை - கமல்


"விதம் விதமான மீசைகள் எனக்குப் பிடிக்கும். அதனால்தான் படத்துக்குப்படம் மீசையை மாற்றுகிறேன்'' என்று கமலஹாசன் கூறினார்.

பொதுவாக ஆலிவுட் நடிகர்கள் மீசை வைத்துக் கொள்வதில்லை. தேவைப்பட்டால் சரித்திர கால படங்களுக்கு தாடி-மீசை வைத்துக் கொள்வார்கள். வடநாட்டில் திலீப்குமார், தேவ்ஆனந்த், அசோக்குமார் ஆகிய நடிகர்களுக்கு மீசை கிடையாது. படங்களில் கூட பெரும்பாலும் மீசை இல்லாமல் நடிப்பார்கள். ராஜ்கபூருக்கு மட்டும் அரும்பு மீசை உண்டு!

தமிழ்நாட்டின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.தியாகராஜ பாகவதர் மீசை வைத்துக்கொள்ளவில்லை. "சியாமளா'' என்றஒரு படம் தவிர மற்ற படங்களில் மீசை இல்லாமல்தான் நடித்தார். பி.யு.சின்னப்பா பெரும்பாலான படங்களில் மீசையுடன் நடித்தார். ஆனால் சொந்த வாழ்க்கையில் மீசை கிடையாது! டி.ஆர்.மகாலிங்கமும் இதே போல் படங்களில் மட்டும் அரும்பு மீசையுடன் நடித்தார். வாழ்க்கையில் மீசை கிடையாது.

வாலிப பருவம் அடைந்தது முதல், பெரும்பாலான படங்களில் கமலஹாசன் மீசையுடன் நடித்துள்ளார். அதுவும், படத்துக்குப்படம் மீசை மாறுபடும். அரும்பு மீசை முதல் அய்யனார் மீசை வரை பலவித மீசைகள் அவர் முகத்தை அலங்கரித்து இருக்கின்றன!

மீசை மீது தனக்குள்ள `காதல்' பற்றி அவர் ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

"ராபர்ட் ரெட்போர்ட் என்ற நடிகரின் மீசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் நடித்த ஒரு படத்தில் மேல் உதடு முழுவதும் கவராகியிருக்கும். கீழ் உதடு மாத்திரம்தான் தெரிந்தது! அந்த மாதிரி மீசை வைக்கணும் என்று முயற்சி பண்ணினேன். ஆனால் என் உதடு ரொம்பப் பெரிசு! இந்த உதட்டை மறைக்கணும் என்றால் சவுரிதான் கட்டணும்!

முதன் முதலில் தொங்கு மீசை பேஷன் வந்தபோது, தமிழ் சினிமாவில் அந்த மீசையுடன் கதாநாயகனாக வந்தவன் நான்தான். "சொல்லத்தான் நினைக்கிறேன்'' படத்தில் எனக்கு மீசையை ஷேவ் பண்ணிவிட்டுச் சின்னதாக வைத்து விட்டார்கள். அதனால் எனக்கு ரொம்ப வருத்தம்.

அதற்குப் பிறகு "அபூர்வ ராகங்கள்'' படத்தின்போது டைரக்டர் பாலசந்தர் சாரிடம், `ஒரிஜினல் மீசையே வைத்துக் கொள்கிறேன். ஒட்டு மீசை என்றால் சிரிக்க முடியவில்லை' என்று சொன்னேன். "மன்மதலீலை'' படத்தையும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் பண்ணினேன். "மன்மதலீலை''யில்தான் முழுமையாக மீசையைக் கீழே இறக்கிவிட்டேன். பலபேருக்குக் கோபம். `ஏன் இந்த மாதிரி மீசை வைக்கிறே? கதாநாயகனாக நடிக்கணும் என்று ஆசைப்படுறே. ஏன் இப்படியெல்லாம் மீசை வைச்சுக்கிறே? சிவாஜி சாரைப் பாரு, எம்.ஜி.ஆரைப் பாரு' என்று சொல்வார்கள்.

அதற்குப் பிறகு வந்தவர்கள் நிறையபேர் என்னைப் போல மீசை வைத்துக் கொண்டார்கள். அப்படி மீசை வைத்துக்கொண்டு புருவத்தைத் தூக்கினால் அவர்களே என்னை மாதிரி இருப்பதாக எனக்குத் தோன்றும். எல்லோரும் இப்படி வைக்கிறார்களே என்று ஒரு கட்டத்தில் மீசையையே எடுத்துவிட்டேன்!

உள்ளூரில் எடுத்தால் என் மனசை மாற்றிவிடுவார்கள் என்று வெளிநாடு போய்விட்டேன். ஆம்ஸ்டர்டாம் நகருக்கு நானும் என் மனைவி சரிகாவும் போயிருந்தோம். அங்கே திடீரென்று ஒருநாள் மீசையை எடுத்துவிட்டேன். சரிகாவுக்கு ஒரே சந்தோஷம். `ரொம்ப நல்லா இருக்கு. இந்த முகத்தை நான் பார்த்ததே இல்லையே' என்று சொன்னாள்.

நாலு ஐந்து ஸ்டில்ஸ் எடுத்தாள். எனக்கு மீசை இல்லாமல் பர்ஸ்ட் பிலிம் டெஸ்ட் எடுத்தது சரிகாதான். அதை எடுத்து வந்து முதன் முதலாக டைரக்டர் சிங்கிதம் சீனிவாசராவ் சாரிடம்தான் காட்டினேன். `என்னுடைய புஷ்பக்கிற்கு இதுதான் எதிர்பார்த்த முகம்' என்று சொல்லிவிட்டார். அதுமாதிரியே மணிரத்னமும், "நாயகனில் முதல் பாதிக்கு இந்த முகத்தை வைச்சுக்கலாம்'' என்று சொன்னார்.

ஒல்லியாக இருக்கும் போது - ரொம்ப சின்னப்பையனாக இருக்கும்போது நம்முடைய ஸ்டேட்டசை நிலை நிறுத்திக் கொள்வதற்கோ, பாடி பில்டிங்கிற்காகவோ முதல் ஸ்டேஜிலேயே பெரிதாக பளிச்சென்று காட்டிக்கொள்ள உதவுவது மீசைதான்.

நான் அப்போது டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தேன். ஒல்லியாக இருப்பேன். இந்த காம்ப்ளெக்சைப் போக்குவதற்கு மீசை பெரிதாக வைத்துக்கொண்டால் என்ன என்று தோன்றியது. அதற்குப் பிறகு நெஞ்சில் முடி வளரவில்லையே என்று குனிந்து குனிந்து பார்த்துக் கொண்டிருப்போம். நெஞ்சில் முடி வளர்ந்தால்கூட நல்ல உடல் கட்டு இருந்தால் பெட்டராக இருக்கும் என்று உடற்பயிற்சி பண்ணுவதில்லையா? அந்த மாதிரி வரிசையில் இந்த மீசையும் ஒன்றுதான்.

மீசை என்று சொன்னால் ம.பொ.சி.யை மறக்க முடியாது. ம.பொ.சி. மீசை பற்றி ராஜாஜி சொன்னதாக, சிவாஜி ஒருமுறை சொன்னார். மீசையோடு ம.பொ.சி. வர்றார்னு சொல்லாமல் `மீசைக்குள்ளே ம.பொ.சி. வருகிறார்'னு சொன்னாராம் ராஜாஜி.

பாரதியார் மீசை எனக்குப் பிடிக்கும். பாரதியார் மீசை மாதிரியேதான் எங்க மாமாவோட மீசையும். பெரியாருடைய பஞ்சு மாதிரி தாடியும் மீசையும் எனக்குப் பிடிக்கும். எனக்கு என்னமோ ரொம்ப மெல்லிசான மீசை மேல் அவ்வளவு விருப்பம் கிடையாது. ஹிட்லர் மீசை எனக்குப் பிடிக்கும். ஆனால் காமெடியன்கள் நிறைய பேர் அதை வைத்து விட்டதால், அதை மதிப்பாக நினைக்க முடியவில்லை.''

மீசை மாதிரியே கமலுக்கு ஆர்வம் அளிக்கும் இன்னொரு விஷயம் முத்தம்!

"சட்டம் என் கையில்'' படத்தில்தான், கமலின் முத்தக்காட்சி முதன் முதலாக இடம் பெற்றது. அந்தப் படத்தில், காதரின் என்ற ஆங்கில நடிகைக்கு முத்தம் கொடுத்தார். இக்காட்சி மிகவும் பரபரப்பை உண்டாக்கியது. இதே கதை, "யேதா கமால் ஹோகயா'' என்ற பெயரில் இந்தியில் தயாராகியது. அந்தப் படத்திலும் கமலின் முத்தக்காட்சி இடம் பெற்றது. "புன்னகை மன்னன்'' படத்தில் ரேகாவுக்கும், "சாணக்யன்'' படத்தில் ஊர்மிளாவுக்கும், "மகாநதி''யில் சுகன்யாவுக்கும், "தேவர் மகன்'', "குருதிப்புனல்'' ஆகிய படங்களில் கவுதமிக்கும் முத்தம் கொடுத்தார்.

முத்தம் பற்றி கமல் கூறியிருப்பதாவது:-

"ஒரு தாய் தன் மகளுக்கும், மகனுக்கும் முத்தம் கொடுக்கிறார். சிறு குழந்தைக்குப் பலரும் முத்தம் தருகிறார்கள். ஆழமான காதலையும், அன்பையும் காட்ட முத்தம் நியாயமானதே. "புன்னகை மன்னன்'' படத்தில் வரும் முத்தக்காட்சி, என்னைப் பொறுத்தவரை சாதாரண விஷயம். "வனமோகினி'' (எம்.கே.ராதா - தவமணிதேவி முத்தக்காட்சி இடம் பெற்ற படம்) காலத்திலேயே முத்தக்காட்சி வந்துவிட்டது. எனவே இதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை.

முத்தக்காட்சி தவறானதோ, பாவச் செயலோ அல்ல. அதைப் பயன்படுத்துகிற முறையைப் பொறுத்து, அந்தக் காட்சி அழகானதாகவே மாறும். எல்லோருக்குமே முத்தம் பொதுவானது! பல் வலி உள்ளவர்களுக்கு மட்டுமே இது விதிவிலக்கு!''

இவ்வாறு கமலஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

(நன்றி : தினத்தந்தி)

3 comments:

முரளிகண்ணன் said...

லக்கி, தொடர்ந்து தலைவர் செய்திகளை பதியுங்கள். நானும் முயற்சி செய்கிறேன் . முடியவில்லை :-(((((((

Anonymous said...

உங்கள் முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள் முரளி.

உலகநாயகனின் ஜப்பான் திரைப்படச் செய்தியும் இங்கே போடுங்க லக்கி சார்.

"தேவர் மகன்" & "சண்டியர் " அதாங்க விருமாண்டி பட மீசைதான் "டாப்பு".

ஆனால் எனக்குப் பிடித்தது, "நல்லசிவம்"(அன்பே சிவம்) அவர்களின் "வெட்டுப்பட்ட" மீசைதான். முகத்தின் அடையாளத்தையே மாற்றிக் காட்டி விட்டது.

"தசாவில்" பல்ராம் நாயுடு மீசை "நச்சுனு" இருந்தது.

ISR Selvakumar said...

பல் வலி உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, பல் தேய்காதவர்களும் இது விலக்கு என்று என்னுடைய எக்ஸ்ட்ரா பிட்டை போட்டுக்கொள்கிறேன்.