தசாவதாரம் படத்துக்காக சிறந்த மக்கள் அபிமான ஹீரோ, வில்லன், காமெடியன் மற்றும் திரைக் கதையாசிரியர் என 4 விருதுகளை கமல்ஹாசனுக்கு வழங்கியது விஜய் டிவி.
விஜய் டி.வி. ஆண்டுதோறும் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்-நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்குகிறது.
2008-ம் ஆண்டுக்கான விருதுகள் சென்னையில் நேற்று வழங்கப்பட்டன.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த விழாவில் ரசிகர்களின் சிறந்த அபிமான ஹீரோவாக நடிகர் கமலஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தசாவதாரம் படத்தில் 10 வேடத்தில் நடித்த கமலஹாசனுக்கு அந்தப் படத்தில் பிளெட்சர் என்ற வில்லன் வேடத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் விருதும், பல்ராம் நாயுடு கேரக்டரில் காமெடி செய்ததற்காக சிறந்த காமெடி நடிகர் விருதும், தசாவதாரம் படத்தின் கதையை உருவாக்கியதற்காக சிறந்த கதாசிரியர் விருதும் வழங்கப்பட்டன. 4 விருதுகளையும் மகிழ்ச்சியுடன் கமலஹாசன் பெற்றுக்கொண்டார்.
ஒரு ஹீரோ, ஒரே படத்திற்காக ஹீரோ, வில்லன் மற்றும் காமெடியனுக்கான விருதைப் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் கமலஹாசன் பேசும்போது, 'நான் முதன் முதலில் வில்லனாக நடித்த பிறகே கதாநாயகன் ஆனேன். இந்த வகையில் எனக்கு விலலன் நடிப்புக்காகவும் விருது கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது.
காமெடியை நான் பாலச்சந்தரிடமிருந்தும், நாகேஷிடமிருந்தும் கற்றுக் கொண்டேன். அந்த வகையில் காமெடிக்கான இந்தவிருதினை நாகேஷுக்கும், சக காமெடி கலைஞர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன், என்றார்.
இந்நிகழ்ச்சியில் கமலைப் பற்றி நடிகர் சிவகுமார் பேசியதும் அவரின் மகன் சூரியாவை உலக நாயகன் பாராட்டிப் பேசியது நிகழ்ச்சியின் ஹைலைட். மேடையில் உலக நாயகனின் ஆசிர்வாதத்தை நெடுஞ்சாண் கிடையாக சூரியா பெற்ற காட்சி பலரையும் நெகிழச் செய்தது.
இந்த நிகழ்ச்சியை எதிர்வரும் 18, 19 திகதிகளில் இரவு 7 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்கிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)