கமல், கே.எஸ்.ரவிகுமார், ஆஸ்கார் ரவிச்சந்திரன் இந்த மூன்று தமிழர்களின் கூட்டணியில் மிகப்பிரமாண்டமாக உருவெடுத்திருக்கிறது தசாவதாரம். இந்தப்படத்தில் கமல் மாறுபட்ட பத்து கெட்டப்புகளில் தோன்றி திரை ரசிகர்களை உள்ளபடியே திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறார். கிராபிக்ஸ்சின் தோழமையோடு இந்தப்படத்தில் அவர் கையாண்டிருக்கும் டெக்னிக்கல் உத்திகளும் காட்சியமைப்புகளும் கோலிவுட் தரப்பையே உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது. தனது படங்களில் அதிக ரிஸ்க் எடுத்து நடிக்கும் கமல் சில படங்களில் கமர்ஷியல் ரீதியான வெற்றிக்கோட்டைத் தொடமுடியாமல் போனதும் உண்டு.
தமிழர்களின் இந்தக் கடுமையான தசாவதார உழைப்பிற்க்கு உரிய வெற்றி கிடைத்துக்கொண்டிருக்கிறதா? வசூல் எப்படி? என்பதை அறிய களம் இறங்கினோம்.
முதலில் தசாவதாரத்தை உருவாக்க கோடிக்கணக்கில் கரன்ஸிகளை இறைத்திருகும் அதன் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை சந்தித்தபோது உற்சாகமாகப் பேச ஆரம்பித்த அவர். " தமிழ் நாட்டில் மட்டும் தினசரி 1250 காட்சிகள் ஓடிக்கிட்டு இருக்கு, அதோட இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஸ்ரீ லங்கா, பிரான்ஸ், அமெரிக்கா, நார்வே இப்படிப் பல வெளிநாடுகளிலும் வெளிமாநிலங்களிலுமா 1755 காட்சிகளும் ஓடிக்கிட்டு இருக்கு ஆக தினசரி 3000 காட்சிகள் உலகம் முழுக்க ஹவுஸ்புல்லாக ஓடுவதால் நாங்கள் வசூல் கடலில் திக்குமுக்காடிக்கிட்டு இருக்கோம், எங்களைப் பொறுத்தவரை கமல் சாதனை நாயகனாக மட்டுமல்ல வசூல் நாயகனாகவும் இருக்கிறார்" எனப் புல்லரித்தபடி பேசினார்.
இவர் சொல்வது சரிதானா? சென்னை சத்யம் தியேட்டர் மேலாளரான கண்ணையாவிடமே கேட்டோம் "ஆமாங்க எங்க தியேட்டரின் 40 வருட வரலாற்றில் 14 நாள்ல 90 லட்ச ரூபாய்க்கு மேல வசூல் செய்த வசூலான ஒரே படம் தசாவதாரம் மட்டும்தாங்க" என்கிறார் அவரும் உற்சாகமாக.
மாயாஜால் திரையரங்க மேலாளர் மீனாட்சி சுந்தரமோ, "ரஜனியின் சிவாஜி படம் 118 நாள் ஓடி ஒரு கோடியே 12 லட்சத்தை வசூலித்தது ஆனா தசாவதாரமோ 17 நாள்லேயே 92 லட்ச ரூபாயத் வசூலாக குவிச்சிருக்கு. வொர்க்கிங்ஸ் டேஸ்ல கூட கூட்டம் குறையல இது உலக சாதனைதான்" என அவரும் தன் பங்கிற்க்கு சிலாகித்தார்.
தசாவதார விநியோகஸ்தர்களில் ஒருவரான பாண்டிச்சேரி கண்ணனோ, "ரொம்ப காலமாக சினிமாமேல வெறுப்பில இருந்த வயதான பெண்களும் ஆச்சாரமான பெண்களும் இந்தப் படத்துக்கு வர்தறைப் பார்க்கமுடியுது. அதேபோல் பொதுவாக கமல் படத்துக்கு ரிபீட் ஆடியன்ஸ் வரமாட்டாங்க ஆனா இதுக்கு ரிபீட் ஆடியன்ஸ் வர்றதையும் காணமுடியுது. பகுத்தறிவு பேசும் கமல் இதில் ஆன்மிகமும் பேசியிருப்பதால்தான் பெண்கள் கூட்டம் அதிகமாக வருது" என தன் கணிப்பையும் அவர் சொல்ல
"சிவாஜி" படம் நஸ்டம் என்று கோர்ட்டுக்குப்போனவராச்சே நீங்க ரஜனி மீதான அந்தக் கோபத்தில்தான் இப்ப கமலைத் தூக்குறீங்களா? என அவரை நாம் கலாய்க்க "அப்படியில்லீங்க சிவாஜி பட விசயத்தில் நாங்க நஸ்டப்பட்டதும் உண்மை, இப்ப லாபம் பார்க்கிறது உண்மை" என்றார் சீரியசாகவே.
மற்ற மாநிலங்களின் பல்ஸ் ரேட்? கேரளா எந்தா பரயுன்னு? விநியோகஸ்தர் ஹென்றியைக் கேட்டோம் அவரோ, " நான் பரயுறதைவிட திருவனந்தபுரம் பத்மநாபா தியேட்டர் முதலாளி கிரிஷ் சந்திரன் கிட்ட பேசுங்க" என்று அவரைக் கைகாட்டினார். கிரிஷ் சந்திரனோ "இவிட மம்முட்டி, மோகன்லால் படங்கள் கூட இப்படியொரு வல்லிய ஓபனிங் கண்டதில்லை. ஈ ஸ்டேட்ல 82 தியேட்டர்ல படம் ரிலீசாகிட்டிருக்கு. மேக்கொண்டு 27 தியேட்டர்காரங்க காத்திட்டிருக்காங்க. இந்த மழைக்காலத்திலும் கூட்டம் நிறைய வருது. மொத்தத்தில் சாரே படம் பிரமாதமாக்கும்" என்றார் பூரித்தபடி.
ஆந்திரா ஏமி செப்புதுன்னாதி? விநியோகஸ்தர் சோபாவிடம் நாம் மாட்லாடியபோது "எங்க சூப்பர் ஸ்ரார் சிரஞ்சீவியோட தாகூர் படத்தின் வசூல் 25 கோடி ரூபா. இந்த பிரேக்கை தசாவதாரம் உடைச்சிடும்போலிருக்கு. இதன் மெகா ஹிட்டைப்பார்த்து இங்க பல ஹிரோக்கள் தங்கள் பட ரீலீசை தள்ளிவைச்சிட்டாங்க. ஒரு சாதரண ரசிகையாக இருந்துசொல்றேன் பல்ராம் நாயுடு கேரக்டரை எங்க ஜனங்க ரொம்ப ரசிக்கிறாங்க. அந்த கிழவி கேரக்டரையும் பெண்கள் சிலாகிக்கிறாங்க. சுனாமி காட்சிகளின் அதிர்ச்சியூட்டும் பிரமாண்டம் கூட ரசிகர்களைப் பிரமிக்கவைக்குது ஒட்டுமொத்ததில் ஆந்திராவே கமலை ஆராதிக்குது" என்கிறார் உணர்ச்சிமயமாய்.
வாட்ஸ் அப் இன் அமெரிக்கா? விநியோகஸ்தர் ஜெயவேல் முருகனோ " யு.எஸ்.ஏவில் ஒரே நேரத்தில் 60 சிட்டிகளில் ரிலீசான படம் இதாத்தான் இருக்கும் இவ்வளவு பிரமாண்டமாக ஒரு தமிழ்ப்படமா என்று அமெரிக்காரர்களே வியக்கிறாங்க. கமலின் பத்து கெட்டப்பும் அவங்களைப் பிரமிக்க வைக்கிறது. அவங்க உணர்ச்சிவசப்பட்டு எங்க கைகளை குலுக்கிப்பாராட்டுகிறாங்க. கமலின் இந்த தசாவதார சூறாவளியில் அமிதாப்பின் சர்க்கார் ராஜ் படம்கூட ஆட்டம் கண்டிருக்கு. மொத்தத்தில் தசாவதாரம் எல்லா வகையிலும் பிரமிப்பு" என்றார் பலத்த சிரிப்போடு.
நார்த் இண்டியா கியா கேத்தா ஹே? இந்தி டப்பிங்கில் 400 காப்பிகள் ரெடியாவதில் தாமதம் ஏற்பட்டதால் பாலிவுட்காரர்களுக்கு இன்னும் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தசாவதாரத்திற்க்காய் தவமிருக்கிறார்கள்.
உலகநாயகனான கமல் இந்தப்படத்தின் மூலம் இன்றைய தேதிக்கு இவரே என்று சொல்லும் அளவிற்கு கலெக்சன் நாயகனாக பதினோராவது அவதாரம் எடுத்திருக்கிறார். மொத்தத்தில் தமிழர்களின் இந்தத் திரைக்கூட்டணி உலக அளவில் மெஹா வெற்றியை தொட்டுக்கொண்டிருப்பதற்காக நாம் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
இரா.த.சக்திவேல்
நக்கீரன் 09.07.2008
டிஸ்கி : சாதித்ததா தசாவதாரம் என்பதுதான் நக்கீரனின் தலைப்பு. அதனை சாதித்த தசாவதாரம் என சற்று மாற்றி அமைத்துள்ளேன். காரணம் தலைப்பு எதிர்மறையாக இருப்பதுபோல் தோன்றியது. உலகநாயகன் கமல் வசூல்ராஜாவாக இப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.