கமல் சொல்லும் வெற்றியின் ரகசியம்

கமல் தன் வெற்றியின் ரகசியம் என்ன என்று தன் பார்வையில் ஒரு பேட்டியில் முன்பு சொன்னது இது.

"உலகத்தைப் பற்றி எதுவுமே தெரிந்து கொள்ள முடியாத என்னுடைய குழந்தைப் பருவத்தில் ஏவி.எம். நிறுவனத்தினால், அதிர்ஷ்டவசமாகக் குழந்தை நட்சத்திரமாய் அறிமுகம் செய்யப்பட்டேன்.

என்னுடைய முதல் படம் வெளியானவுடன் மற்றவர்களுக்குக் கிடைக்கிற மரியாதை, புகழ் எல்லாவற்றையும்விட எனக்கு அதிகமாகவே கிடைக்க ஆரம்பித்தது.

குறிப்பாக என்னுடைய வயதுடையவர்கள் எல்லோரும் என்னை ஏதோ கடவுள் அவதாரமாக நினைத்துக்கொண்டு நேசிக்கத் தொடங்கினார்கள்.

மற்றவர்களின் பாராட்டுகளும், எனக்கு ஊக்கத்தைக் கொடுத்த அவர்கள் வார்த்தைகளுமே என்னை ஒரு நடிகனாகவே நான் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்கிற ஆசை விதைகளை, அன்று எனது இளம் நெஞ்சில் ஊன்றியது.

இன்று எல்லா மொழிகளிலும் நடித்து ஒரு பெரிய நடிகனாக நான் மாறி நிற்பதற்குக் காரணம், அன்று எனக்குள் எடுத்துக்கொண்ட சபதம்தான். `பெரிய நடிகனாக வேண்டும்' என்ற ஒரே லட்சியத்துடன் எனது ஒவ்வொரு பொழுதுகளும் புலர்ந்தன.

இவ்வளவு ஆண்டுகளை நான் சினிமா உலகிலேயே செலவழித்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது இதயம் முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் வழிந்தோடுகிறது.

என்னுடைய துரதிர்ஷ்டம் நான் யார் யாரை நண்பர்கள் என்று நினைத்துப் பழக ஆரம்பித்தேனோ அவர்கள் எல்லோரும் எனக்கு எதிரியாகவே மாறியது.

ஆனாலும் எந்த இடத்தை எட்டிப் பிடிக்க நினைத்தேனோ, அந்த இடத்தில் இன்று நான் இருக்கிறேன் என்பதுதான் சந்தோஷமான செய்தி.

திடீரென்று இன்று நான் மறைந்தாலும் `கமல்' எனும் ஒரு கலைஞன் திரைப்பட உலகில் வாழ்ந்தான் என்கிற பெயர் எனக்கிருக்கும்.

ஒரு நடிகனாக மட்டுமே என்னை நான் வளர்த்துக் கொள்ள நினைத்திருந்தால் எனது வரலாறும் எப்போதோ மறைக்கப்பட்டிருக்கும். ஆனால் உதவி இயக்குனராக, நடனப் பயிற்சியாளராக, கதை இலாகாவில் ஆலோசகராக இப்படி ஒரு திரைப்படத்திற்கான அத்தனை துறைகளிலும் என்னை நான் ஆழமாக வளர்த்துக் கொண்டேன்.

இதற்குக் காரணம் ஒரு துறையில் இல்லாவிட்டாலும், இன்னும் ஒரு துறையில் திரைப்பட உலகிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான்.

நான் செல்கின்ற ஒவ்வொரு இடத்திலேயும் போட்டியைச் சந்தித்திருக்கிறேன். இப்படிப்பட்ட போட்டிகள் என்னையும், என் திறமையையும் இன்றளவும் வளர்த்து வருகிறது.

வெளிப்படையாக சொல்லப் போனால் ஒரு "ராஜபார்வை''யில் நான் நடித்தது போலவோ, ஒரு "சலங்கை ஒலி''யில் நான் நடித்தது போலவோ, ஒரு "ஏக் துஜே கேலியே''வில் நான் நடித்தது போலவோ, ஒரு "அபூர்வ சகோதரர்களி''ல் அப்புவாக நடித்தது போலவோ, ஒரு "அவ்வை சண்முகி''யில் நடித்தது போலவோ, ஒரு "இந்தியனி''ல் நான் நடித்தது போலவோ வேறு யாராலும் நடிக்க முடியாது என்பது நான் ஏற்படுத்திய சாதனைதான்.

எந்த கேரக்டரிலும் கமலால் நடிக்க முடியும் என்று இன்று நான் பெயர் எடுத்திருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் எந்தவிதமான சிபாரிசும் இல்லாமல் என்னுடைய திறமையை மட்டுமே மூலதனமாக வைத்து நடித்திருக்கும் நடிப்புகள்தான்.

எனது வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம் நான் கதைகளையும், அதில் வரும் கதாபாத்திரங்களையும் பற்றி நன்றாக அலசிப் பார்க்கத் தெரிந்தவன்.

பேனர் என்பதை எப்போதும் இரண்டாம் பட்சமாக மாற்றி கதை என்ன... கேரக்டர் என்ன... என்பதை மட்டுமே தெரிந்து கொள்வேன்.

அத்துடன் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக இருந்த நாளிலிருந்தே நான் கற்றுக்கொண்டு வந்தது, மற்றவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைச் செய்யவேண்டும் என்பதைத்தான்.

செய்வதைத் திறமையுடன் செய்து வருவதால், இன்று எனக்கென்று ஒரு இமேஜூம், குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறார்கள்.

ஒரு துறையில் வெற்றியடைய வேண்டும் என்றால், நமது முழு கவனத்தையும் அதே துறையில் செலுத்தினால் போதும் என்பார்கள். நானும் அப்படித்தான். நான் ஏற்ற ஒவ்வொரு பாத்திரமும், பல நாட்கள் அந்த அந்தப் பாத்திரங்களுடன் நான் பழகி செய்தவைதான்.

எந்த எந்த கண்ணோட்டத்துடன் என்னைப் பார்க்க விரும்புகிறார்களோ, அந்தக் கண்ணோட்டத்தில் காட்சி தருவதையே நான் பெரிதும் விரும்பினேன்.

பெரும்பாலும் எனக்கு "டூப்" போட்டுக் கொள்வதை நான் வெறுக்கிறேன். ஒரு இளைஞனின் முழுத்திறமையும் வெளிப்பட வேண்டுமென்றால் ஒவ்வொரு கட்டத்திலும் அவனது திறமை பளிச்சிட வேண்டும் என்று நினைப்பவன் நான்.

என்னுடைய ஒன்றிரண்டு படங்கள் தோல்வியடைகிறது என்றால் ஒன்று முழு கவனத்தையும் அதில் நான் செலுத்தியிருக்க மாட்டேன், இல்லையென்றால் இயக்குனர்கள் அவர்கள் இஷ்டத்திற்கு செய்தவையாக இருக்கும்.

இவையெல்லாம் மீறி நான் வெற்றி பெற்று வருகிறேன் என்றால் அதற்குக் காரணம், மற்றவர்கள் போல் நான் மாறிவிடவேண்டும் என்ற எண்ணமல்ல. நான் நானாகவே இருந்து கொண்டு, எல்லாவற்றிலும் நான் இருக்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணமும், எல்லா பாத்திரங்களுக்குள்ளும் நான் இருக்க வேண்டும் என்ற துடிப்புடன், நான் எடுத்துவரும் முயற்சிகளும்தான்.

இத்தனை ஆண்டு காலமும் நான் இந்தத் துறையில் இருந்து வருவதற்கு இவைகளே உதவியாக இருந்து வருகின்றன."

இது கமலுக்கும் சினிமாவும் மட்டும் தொடர்புடைய வெற்றி ரகசியம் இல்லை. ஒவ்வொருவருமே அவரவர் துறையில் இதுப்போல் இருந்தால், அனைவருக்குமே வாழ்க்கையில் வெற்றி நிச்சயமே!

இன்று பிறந்த நாள் காணும் உலகநாயகனுக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Source : http://www.saravanakumaran.com/2008/11/blog-post_07.html

1 comments:

கோபிநாத் said...

\\இது கமலுக்கும் சினிமாவும் மட்டும் தொடர்புடைய வெற்றி ரகசியம் இல்லை. ஒவ்வொருவருமே அவரவர் துறையில் இதுப்போல் இருந்தால், அனைவருக்குமே வாழ்க்கையில் வெற்றி நிச்சயமே!\\

மிக சரியாக சொன்னிங்க...அருமையான பதிவை தந்தமைக்கு அனைவருக்கும் என்னோட நன்றிகள் ;)