"கமல் என் மகன்!" - பரமக்குடி சீனிவாசன்


சினிமாத்தன பரபரப்புக்கும் தனக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை என்பதை அடக்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தது, அமைதியை அணிந்திருந்த அந்த வீடு.

"மகனுக்குத் தேசிய அவார்டு ("மூன்றாம் பிறை") கெடச்சிருக்கு ! ஆனா, உங்க முகத்துல அதுக்கான அடையாளத்தையே காணோமே!"

"சந்தோஷம் இருக்கத்தான் செய்யுது. அதுக்காக தலைகால் புரியாம ஆடச் சொல்றீங்களா?" - பளிச்சென்று கேட்கிறார் பரமக்குடி அட்வகேட் டி. சீனிவாசன்.

"உங்க மகன் இந்த அளவுக்கு சூப்பர்ஸ்டாரா வர்வார்னு ஆரம்ப காலத்துல நெனச்சீங்களா?"

"நிச்சயமா ! நேத்துகூட " Oh My Boy, You Deserve OSCAR "னுதான் அவனுக்குத் தந்தி அடிச்சேன்!"

"இந்தப் பெருமையில், கமலை வளர்த்து ஆளாக்கிய உங்கள் பங்கு பற்றி...."

"கமல்கிட்டே அளவுக்கதிகமான திறமை இருக்கு. முன்னுக்கு வந்துட்டான். அவ்வளவுதான். மத்தபடி, பெரிசா லொல்லிக்கொள்ற அளவுக்கு நான் ஒண்ணும் செஞ்சிடலை !"

"சரி, சிறுசா சொல்லிக்கொள்ற அளவுக்காவது இருந்திருக்கணும்லே.....?"

"சினிமாத்துறையிலே பெரிய கலைஞனாகப் பேர் எடுக்கணும்கறத்துக்காக அவனுக்கு எல்லாவிதமான பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்தேன். ஆரம்ப காலத்துல என்கிட்டே வந்து, "நீங்க சொன்ன மாதிரி வாய்ப்பு வரலையே"னு அடிக்கடி வருத்தப்படுவான். அப்போதெல்லாம் அவன் மனச்சோர்வுக்கு டானிக் கொடுத்து, உற்சாகம் ஊட்டுவேன். "நான் தேய்ந்து அழிவனேயன்றி, துருப்பிடித்து அழியமாட்டேன்" என்கிற வாசகத்தைத் திருப்பித் திருப்பி நினைவுப்படுத்துவேன். அவனோட உணர்வுகளைப் புரிஞ்சுக்கிட்டு, என்னைவிட அதிகமா அவனுக்கு ஆதரவு கொடுத்த என் மனைவிக்குத்தான் இந்த வெற்றியில் பெரும்பங்கு உண்டு. !"

"கமல் வளர்ச்சியில் உங்க மனைவிக்குப் பெரும்பங்கு உண்டுனு சொல்றீங்க! ஏதாவது ஒரு நிகழ்ச்சியை நினைவுக்குக் கொண்டு வர முடியுமா?"

"எங்க குடும்ப நண்பராக நெருங்கிப் போயிருந்த டி.கே. சண்முகத்தின் நாடகத்துல அவன் நடிச்சிட்டிருந்த நேரம்; ஹாஸ்பிடலில் ஆபத்தான் என் மனைவி என்னைக் கூப்பிட்டு, "நான் சாகறத்துக்கு முன்னால டி.கே.சண்முகத்திடம் கொஞ்சம் பேசணும்"னு கெஞ்சினா. ஒரு டாக்ஸியில் கொண்டுபோய் அவர் வீட்டில் விட்டேன்.

'அய்யா ! நாங்க பணக்காரங்கதான். ஆனாலும், உங்க நாடகக் குழுவுல இருக்கிற ஏழைகளோட ஒரு ஏழையா என் மகனையும் சேத்துக்குங்க ! நீங்க சரின்னு சொல்லிட்டா, நான் நிம்மதியா உயிர் விடுவேன்'னு சண்முகத்திடம் சொன்னாள் என் மனைவி.

உடனே அவர், 'கவலைப்படாதீங்கம்மா! உங்க பையன் இனி என் நாடகக் குழுவுல மட்டுமல்ல; என் குடும்பத்தியேயும் ஒருவன். என் பிள்ளைகளுக்கு என் சொத்துல எவ்வளவு கெடைக்குமோ அதே அளவு அவனுக்கும் உண்டு'ன்னு உருக்கமாகச் சொன்னார்."

" 'அவார்ட் கெடைச்சதுல கமல் அப்பாவை விட அதிகமா நான் சந்தோஷப்படறேன்'னு கே. பாலசந்தர் சொல்லியிருந்தாரே... படிச்சீங்களா?"

"படிச்சேன்! உடனே கே.பி-க்கு ஒரு லெட்டர் எழுதிப் போட்டேன். 'நீங்க சொல்லியிருப்பது உண்மைதான். என்னை விட நீங்க அதிகம் சந்தோஷப்படுவதுதான் எனக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கிறது'ன்னு எழுதினேன்.

ஆரம்ப காலத்துல கே.பி.யின் நாடகத்துல அவனை நுழைக்கிறதுக்கு எவ்வளவோ ட்ரை பண்ணினோம். முடியாமல் போயிடுச்சு. ஜெமினிதான் அவரிடம் திருப்பித் திருப்பி பிரஸ் பண்ணி அரங்கேற்றத்துல சான்ஸ் வாங்கிக் கொடுத்தாரு.!"

தன் மகனின் இந்த வளர்ச்சியில், கே.பியின் ரோலைப் பற்றி குதூகலத்துடன் நிறையவே பேசுகிறார் டி.எஸ்.

"கமல் சின்ன வயசுல புத்திசாலித்தனமான குறும்புச் சேட்டைகள் அதிகம் பண்ணியிருப்பாரே?"

"ஆமாம், எங்க வீட்டுக்கு யார் வந்தாலும், அவர்களின் ஆக்டிவிட்டீஸை உன்னிப்பா கவனிப்பான். அவங்க போன பிறகு, அதே மாதிரி செய்து காட்டுவான். போரடிக்கிற நேரம், நானும் என் மனைவியும் அவனைப் படக்கத்தில் இருத்தி, 'மிமிக்ர்' செய்யச் சொல்லி ரசிப்போம்!

இங்குள்ள என் நண்பரின் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் ஊழியரிடம் போய், 'நான் எம்.ஜி.ஆராக்கும். என்னை உள்ளெ விடறியா? இல்லாட்டி டிஷூம்... டிஷூம்தான்' னு கையக் கால உதைப்பான்."

"நடிகைகளைக் கிண்டல் பண்ணுவதில் கில்லாடின்னு பேர் வாங்கியிருக்கிறாரே! உங்ககிட்டே அப்படி எப்போதாவது..."

"ஸ்டாரா ஆனதுக்கப்புறம் என்னை நேருக்கு நேர் சந்திக்கிறதைக் கூடிய மட்டும் அவாய்ட் பண்ணுவான்."

"உங்ககிட்டே... அவ்வளவு பயமா?"

"அப்படித்தான்னு நினைக்கிறேன்."

"கமல்கிட்டே உங்களுக்குப் பிடிச்ச அம்சம் எது?"

"சினி பீல்டுல நுழையறப்போ 'மது, புகையிலை, மாது.... இந்த மூணுக்கும் இடம் கொடுக்க மாட்டேன்' னு பிராமிஸ் பண்ணித் தரச்சொன்னேன். முதல் ரெண்டுக்குதான் சம்மதிச்சான். ஆனாலும், அன்னிக்குக் கொடுத்த வாக்குறுதியை இன்னும் காப்பாத்திட்டு வர்றதை நெனச்சு சந்தோஷப்படறேன்!"

"திறமையான கலைஞனை உருவாக்கியிருக்கிற இன்டெலக்சுவல் பாதர் என்ற முறையில் கேட்கிறேன். ஸைக்காலாஜிக்கலி, குழந்தைகளை எப்படி வளர்க்கணும்?"

"குழதை கருத்தரித்த நிலையிலேயே வளர்ப்புப் பணியை ஆரம்பிச்சிடணும்கிறதுதான் என் கருத்து. கர்ப்பமாயிருக்கின்ற தாயின் உள்ளுணர்வுகளைப் பொறுத்தே குழந்தைகளின் வளர்ச்சி அமைகிறது. குழந்தைப் பருவத்திலேயே அவர்களின் டேஸ்ட் என்ன என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து, இப்படித்தான் இவனை உருவாககவேண்டும் என்று திட்டமிட்டு நம்பிக்கையோடு வளர்த்தால், நாட்டில் ஜூனியஸ் பஞ்சத்தைப் போக்கிடலாம்."

வழக்கறிஞர் குழு ஒன்று ஆளுநர் குரானாவைச் சந்தித்தபோது, "ஐயம் சீனிவான் ! அட்வ்கேட் அட் பரமக்குடி"ன்னு சொன்னாராம் இவர். பக்கத்தில் இருந்தவர், 'கமல்ஹாசன் பாதர்' என்று கிசுகிசுத்தவுடன், கவர்னர் "ஓ..! யூ ஆர் கமல்ஸ் பாதர்?!" என்று உற்சாகத்தோடு கேட்டாராம். உடனே, "நோ ! மை சன் ஈஸ் கமல் !" என்று கூறி, அங்கு இருந்த எல்லோரையும் அசர வைத்திருக்கிறார் சீனிவாசன்.

"நீங்க கமல் அப்பா இல்லை; உங்க மகன்தான் கமல்னு இந்த இரண்டு மணி நேர உரையாடல் நிருபிச்சிட்டீங்க" என்று சொல்லி, விடைபெறுகிறோம். மழலையாய்ச் சிரித்து மகிச்சியுடன் அனுப்பி வைக்கிறார்.

நன்றி:
ஆனந்த விகடன், 12.11.08.

8 comments:

அருண் said...

அருமையான பதிவு லக்கி அண்ணே.


"நோ ! மை சன் ஈஸ் கமல் !" Super punch.

கோபிநாத் said...

மீண்டும் ஒருமுறை படித்தேன்...கலக்கல் பேட்டி ;))

Anonymous said...

"மர்ம யோகி" இப்போது கிடையாது.

கமல்ஜியின் அடுத்த படைப்பு: "தலைவன் இருக்கிறான்". மோகன்லால், வெங்கடேஷ் உடன் நடிக்கிறார்.

மர்ம யோகி கைவிடப்பட்டது மிகப் பெரிய சோகம்.

"நான் தேய்ந்து அழிவனேயன்றி, துருப்பிடித்து அழியமாட்டேன்"

எத்தனை சத்தியமான வார்த்தைகள்.

லக்கி சார் ! உங்க பிஸியான நேரத்திலும் இந்த பிளாகில் அப்டேட் செய்யறீங்க. இது கமல் மீதான் அன்பைதான் காட்டுகிறது.

Poornima Saravana kumar said...

சகலகலா வல்லவனின் சகலத்தையும் இங்கே தெரிந்துகொள்ளலாம் போல..

Poornima Saravana kumar said...
This comment has been removed by the author.
Poornima Saravana kumar said...
This comment has been removed by the author.
Muniappan Pakkangal said...

Kamal en magan,his father was so affectionate to Kamal,i have seen it in person in my younger days.

tirupur said...

"உங்க மகன் இந்த அளவுக்கு சூப்பர்ஸ்டாரா வர்வார்னு ஆரம்ப காலத்துல நெனச்சீங்களா?"

ஒரிஜினல் பட்டத்தை போட வேண்டியதுதானே. எதுக்கு மத்தவங்களோட பட்டம். என்னதா இருந்தாலும் சூப்பர் ஸ்டார்னா உங்களுக்கும் ஆசை வரத்தானே செய்யும். தமிழ் நாட்டில் குழந்தையைக் கேட்டால் கூட சூப்பர் ஸ்டார் யார்னு கரெக்ட்டா சொல்லும். உங்களுக்கு இது கூட தெரியவில்லையா? இதுதான் கடிவாளம் போட்ட குதிரையைப்போல இருக்கக் கூடாது. உலகத்துல என்ன நடக்குதுங்குரதையும் பார்க்கணும்.