
எனக்கும் கமல்ஹாசனுக்கும் சுமார் முப்பதாண்டு நட்பு உண்டு. அடிக்கடி சந்திக்கிற
வாய்ப்பு இல்லையென்றாலும்,ஒவ்வொரு சந்திப்பின்போதும்.அவர் தன்னை ஏதாவது ஒரு விதத்தில புதுப்பித்து கொண்டிருப்பது தெரியும்.
இத்தனை படங்கள் நடித்து ஒரு இமாலய இடத்திற்கு போயிருந்தாலும், ஒவ்வொரு படத்தையும் தன் முதல் படமான இன்றும் நினைக்கிற அவருடைய தொழில் வெறி பிரமிக்க வைக்கும்.
வைரமுத்து வீட்டு திருமணத்தின்போது இந்த வாரம் சந்திப்போம் என்று சொல்லியிருந்தார். புதன்கிழமை (25.6.2008) மாலையின், நானும், நூற்றாண்டை கடந்து விட்ட அல்லயன்ஸ் தமிழ் பதிப்பகத்தின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனும் போயிருந்தோம். வழக்கம் போல ஸ்ரீனிவாசன் கமலுக்கு கொடுக்க ஏராளமான புத்தகங்கள் கொண்டு வந்திருந்தார். இம்முறை ஏராளமான ஆன்மிக புத்தகங்கள்.
தன்னுடைய அலுவலக அறையில் லாப் டாப் போன்ற ந்வீன கருவிகள் சூழ அமர்ந்திருந்தார். அவரை சுற்றிலும் ஏராளமான புத்தகங்கள்.புன்முறுவலோடு வரவேற்றார்.`தசாவதாரம்' பற்றிய பேச்சுடன் ஆரம்பித்தது எங்களது அன்றைய மாலை சந்திப்பு. `படத்தைப் பத்தி பல விதமான விவாதங்கள் நடந்துக்கிட்டிருக்கு. ஆனால் இப்படி ஒரு முயற்சி வெற்றி அடைஞ்சுதில அடுத்து இன்னும் ஏதாவது புதுசு பண்ணலாம்ங்கிற நம்பிக்கை இருக்கு ' என்றார்.
`வியாபார ரீதியில் படம் எப்படி ?'
`இதைத்தான் எழத்தாளர் ஜெயகாந்தனும் என்னிடம் கேட்டார்.`ஏம்பா, எனக்கு படம் பிடிச்சிருக்கு. அதனாலதான் பயமா இருக்கு. எனக்கு பிடிக்கிற படங்கள் வெற்றி பெர்றுவதில்லை. இந்த சினிமா எப்படி?' என்றார்.
`அது சித்தாள் வரைக்கும் படத்துக்கு வராங்க.( ஜெயகாந்தனின் மிகப்பிரபலமான நாவல் ` சினிமாவுக்கு போன சித்தாளு') என்று சொன்னேன். இந்த படம் கீழ இறங்காதுன்னு சொன்னாங்க. எனக்கு வர்ற தகவல் எல்லாம் எம்ஜிஆர் படம் பாக்க வர்ற மாதிரி வராங்கன்னு தகவல்'.
`முதல்ல இப்படி ஒரு படம் பண்ணனும்னு எங்க ஆரம்பிச்சது ?' இது நான்.
`வேட்டையாடு விளையாடு' முடிஞ்சதும், அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்ச போது கெளதம் மேனன் ` பச்சைக்கிளி முத்துச்சரம்' கதையத்தான் எனக்கு சொன்னார்.எனக்கு
ஒத்துவராதுன்னு தோணிச்சு.உடனே ஏதாவது வித்யாசமா பண்ணலாமேன்னு, ` நவராத்திரி'யில சிவாஜி சார் பண்ணின மாதிரி, ஒன்பது வேடங்கள்னு பேச்சு ஆரம்பிச்சு, அப்புறம்தான் ஒரு படி மேலே போய பத்து வேடங்கள்ன்னு யோசிச்சப்பதான், ` இந்த `தசாவதாரம்' விஷயம் வந்தது'
`இந்த ரங்கராஜ நம்பி விஷயம்?'
`இந்த மோதல்கள் வரலாற்றில இருக்கு. அந்த காலத்தை களப்பிரர்கள் காலம்னு சொல்வாங்க. சரித்திரலேயே நடந்த மிகப்பெரிய இன ஒழிப்புன்னா அது சமண மதத்துக்கு நடந்த மாதிரி எப்போதுமே நடந்ததில்ல. அதற்கு பிறகுதான் பல விவகாரங்கள் முளைத்தது. அதற்கு முன்பு பிறாமணர்கள் புலால் சாப்பிட்டுக்கிட்டுத்தான் இருந்தாங்க. இந்த சுத்த சைவமெல்லாம், சமணர்களிடமிருந்ந்துதான் பிறாமணர்களுக்கு வந்தது.வரலாற்றை நல்ல படிச்சு பார்த்தா, ஆர்ய சத்ரியர்கள், ஆர்ய் சூத்திரர்கள் என்றெல்லாம் கூட பிரிவுகள் கூட இருந்தது. அப்போது வைணவர்கள், குறிப்பாக ராமாஜரின் சீடர்கள் வீரமாக இருந்திருக்காங்க. தங்களுடைய கொள்கையில் விடாப்பிடியாக இருந்திருக்கிறார்கள். அதற்கு பிறகு மனித குலத்தில் சில மனிதர்கள் அவதாரம் எடுத்தாங்கன்னு சொல்ற மாதிரியான கதைதான். நாம் இன்றைக்கு பண்ற தவறுகள்தான் நாளைக்கு நம்மை வழி நடத்தும்.
அந்த ஆரம்ப காட்சியில் நீங்க `விஷ்ணு ஸகஸ்ரநாமம்' சொல்லும்போது, அது ஏதோ மனப்பாடம் பண்ணி சொன்ன மாதிரி இல்லையே ? தினமும் கோயிலுக்கு போகிற ஒரு தீவிர வைணவர் சொல்ற மாதிரி தானே இருந்தது.?
`ஆமாம், எனக்கு விஷணு ஸ்கஸ்ரநாமம் முழசா தெரியுமே' கொஞ்சம் சொல்லிக்காட்டுகிறார்.`சுப்ரபாதம் முழசா தெரியும். திருப்பல்லாண்டு கூட தெரியும். எனக்கு அபிராமி அந்தாதி தெரிஞ்சதினாலதான் என்னால் `குணா' படத்தில் அதை சொல்ல முடிஞ்சுது. இதுக்கு காரணம் டி.கே. சண்முகம் அண்ணாச்சி.குழந்தையாக இருந்தபோது அவருடைய நாடக குழுவில இருந்தேன். ஊர் ஊரா போவோம். அப்ப கோவிலுக்கு கூட்டிக்கிட்டு போவார். எந்த கோவிலுக்கு போறோமோ அந்த பாடல் சொல்லணும். அப்படித்தான் தேவாரம், திருவாசகம் படிச்சேன். பிரபந்தத்தில எனக்கு பல பாடல்கள் தெரியும்'அபிராமி அந்தாதியிலும், திவ்யபிரபந்தத்திலும் சில பாடல்கள் சொல்லிக்காட்டினார்.
உண்மையிலேயே ஆதி சங்கரரும், ராமானுஜரும்தான் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகள்.அவங்க தப்பா எடுத்துக்கலைன்னு ஒரு விஷயம், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் கி.வீரமணியும், தொல்திருமாவளவனும் தங்களை ராமானுஜதாஸன்னு சொல்லிக்கிட்டா கூட தப்பில்ல. ஏன் தெரியுமா ? பண்டை காலத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவுக்காரங்கதான் மூட்டைத் தூக்கிக்கிட்டு போவாங்க. வழியில அவங்களுக்கு முதுகு வலிச்சா, யாரும் உதவிக்கு வரமாட்டாங்க. மூட்டையை கீழே தரையில் வெச்சா, மறுபடியும் சுமக்கிறது கஷ்டம். இப்ப கூட கிராமப்பகுதிகள்ள, நீங்க மூணு கல் நட்ட சுமைதாங்கி கல் இருக்கும். இதை நிறுவனம்னு முதல்ல சொன்னவர் யார் தெரியுமா? ராமானுஜர்தான்.இது ராமானுஜர் படம் எடுத்த ஜீ.வி, ஐயர் சொல்லித்தான் எனக்கே தெரியும். ஒரு நாள் ஒரு கிராமத்து பக்கம் இருந்தோம். அப்ப அங்கிருந்த சுமைதாங்கி கல்லை பார்த்து அதை தொட்டு கும்பிட்டார். என்னன்னு கேட்டேன். இது ராமானுஜருடைய ஏற்பாடு என்றார். இதை யாராவது அந்த காலத்தில யோசிச்சிருப்பாங்களா.இப்படி ராமானுஜரைப் பற்றி கேள்விப்பட்ட பல விஷயங்களில் பாதிப்புதான் அந்த பாத்திரம்.
`இந்த படத்தின் மூலமாக கடவுள் அவதாரம் இருக்குன்னு ஒத்துக்கிறீங்களா ?
`அது உங்க perception. அதுதான் படத்திலேயே சொல்லியிருக்கேனே. கடவுள் இருந்தா நல்லாயிருக்கும்னு. எனக்கு பல ஆன்மிகப் பெரியவர்கள் நல்ல தமிழ் கத்துக் கொடுத்திருக்காங்க. ஒரு விஷயம் சொல்லணும். நான் சினிமாவில வளர்ந்துக்கிட்டுருக்கிற நேரம். வாரியார் சுவாமிகள் எங்கப்பாவுக்கு நல்ல நண்பர். பல சமயங்கள்ள எங்கப்பாவோடு அவருடைய காலட்சேபங்களுக்கு போயிருக்கேன். ஒரு நாள் தீடிர்ன்னு வாரியார் சுவாமிகள் என் வீட்டுக்கு வந்தார். `உனக்கு நம்பிக்கை இல்லேன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் நான் முருகனுக்கு கோவில் கட்டறேன். நீ எனக்காக பணம் கொடுக்கணும்'னு சொன்னார். `நீங்க கேட்டா கொடுக்க ஆசைதான். ஆனால் பெரிய பணம் இப்ப இல்லையே' ன்னு சொன்னேன். `நீ எவ்வளவு வேணும்னாலும் கொடு' என்றார். அப்ப எனக்கு சம்பளமே 25 ஆயிரம்தான். பத்தாயிரம் ரூபாய் கொடுத்தேன்.அப்ப எங்கூட இருந்த பகுத்தறிவு நண்பர்கள் கூட எங்கிட்ட ` நீ யாருன்னு சொல்லு'ன்னு சண்டை போட்டாங்க.`நீங்க என்ன வேணும்னாலும் நினைச்சுக்குங்க' அவர் கிட்ட நான் தமிழ் கத்துக்கிட்டேன்'ன்னு சொன்னேன். இப்படி எனக்கு தமிழ கத்துக்குடுத்தவங்க நிறைய பேர் இருக்காங்க. அதனாலதான் இந்த படத்தில் என்னால அசினுக்கு மங்களா சாசனம் சொல்லிக்கொடுக்க முடிஞ்சது. அவங்க மலையாளம் அவங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரிஞ்சுது.'
இப்படி பல விஷயங்களை சுமார் ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். தமிழ் தெரியாத பல தொழில் நுட்ப கலைஞர்களுக்காக அவர் ஆங்கிலத்தில் எழதி வைத்திருந்த `தசாவதாரம்' திரைக்கதையை காட்டினார். அதை பார்க்கும்போது இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாருக்கு அதிக வேலையே இருந்திருக்காது என்பது புரிந்தது. ஒவ்வோரு அசைவையும் அவரே குறித்து வைத்திருந்தார். அடுத்த படமான `மர்மயோகி' முழ திரைக்கதையும் ஆங்கிலத்தில் தயாராக இருந்தார்.
என்னுடைய வாழ்க்கை லட்சியமே `THE DECLINE AND FALL OF ROMAN EMPIRE' எட்வர்ட் கிப்பன் எழதிய ஏழ வால்யூம்கள் என்னிடம் இருக்கிறது. அதை தமிழாக்கம் செய்ய வேண்டும். அதே போல் `THE RISE AND FALL OF THE THIRD REICH' BY WILLIAM SHEIRER. இதையும் தமிழில் கொண்டு வரவேண்டும். என்னுடைய இந்த ஆசை கமலுக்கும் தெரியும். இப்போது அதற்கு துணையாக பிஷருடைய புத்தகத்தையும் படிக்க சொன்னார். தான் தவில் கற்றுக்கொண்ட அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
தலைநிறைய பல விஷயங்களை அவரிடமிருந்து வாங்கி நிரப்பிக்கொண்டு திரும்பினோம்.
(நன்றி : எழுத்தாளர் சுதாங்கன்)